[X] Close

தேர்தலில் முழு வெற்றி கிடைக்கும்; அதிமுக ஆட்சி தொடரும்: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:59 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த ஆட்சி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், முடிவுக்காக காத்திருக்கிறோம். அடுத்து நடக்கவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த 4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றிக்காக தேமுதிக தொண்டர்கள் பாடுபட வேண்டும். கூட்டணி தர்மம் அடிப்படையில் அதிமுகவுக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 4 தொகுதிகளில் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். நிச்சயம் பிரச்சாரம் செய்வேன். பிரச்சார தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

அதிமுகவின் 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்பது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம். சாதி மோதலை தூண்டிவிட்டு அதன்மூலம் ஆதாயம் தேடக் கூடாது. சாதி மோதலைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த ஆட்சி தொடரும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close