[X] Close

'மெட்ரோ நிறுவனத்தின் பொய்ப் பிரச்சாரம்: அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்'- சிஐடியூ வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 17:02 pm
  • அ+ அ-

ஊழியர்கள் நீக்க விவகாரத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொய்ப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் இதில் அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் சிஐடியூ  தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

 

இதுதொடர்பாக சிஐடியூ தொழிற்சங்கம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்துக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் 7 நிர்வாகிகளை கூண்டோடு வேலை நீக்கம் செய்துள்ளது. இன்னொரு ஊழியரும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வேலை நீக்கங்களை ரத்து செய்யக் கோரியும், ஊதியக் குறைப்பு, விடுமுறை வெட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகவும், நிலைத்தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த முறைத் தொழிலாளர்களை அமர்த்தி பணிப்பாதுகாப்பை கேள்விக் குறியாக்கக்கூடாது  என்பதற்காகவும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

 

நிர்வாகம் இதில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், தொழிலாளர் துறையின் அறிவுரையை ஏற்று செயல்படுத்தவும் முன் வராமல் பொய்ப் பிரச்சாரங்களிலும் அவதூறுகளிலும் ஈடுபட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் மீது திருட்டுக் குற்றமும் சாட்டப்பட்டுள்ளது என்று நிர்வாகம் கூறுவது அப்பட்டமான பொய். வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள 7 நிர்வாகிகள் மீதும் நிர்வாகம் சுமத்திய குற்றச்சாட்டுகளிலேயே திருட்டுக்குற்றம் இல்லை. கான்ட்ராக்டருக்கு கடிதம் எழுதியது சங்கத் தலைவர் அ.சவுந்தரராசனே தவிர எந்த நிர்வாகியும் அதில் கையொப்பமிடவில்லை. வாதத்திற்காக அப்படியே ஒரு கடிதம் எழுதியிருந்தாலும் அது வேலை நீக்கத்திற்கான குற்றமும் அல்ல. மக்களை திசை திருப்பவே இந்த பொய்ப் பிரச்சாரம்.

 

ஆட்டோ மேட்டிக் சிக்னல் சிஸ்டத்தை தொழிலாளர்கள் பழுதடையச் செய்தார்கள் என்றும் அதனால்தான் ரயில் சர்வீஸ் பாதிப்படைந்தது என்றும் கூறி வேலை நிறுத்தத்தை மறைக்கவும், தொழிலாளர்கள் மீது நாசவேலை செய்தனர் என்றுகூறி பழிபோடவும் நிர்வாகம் முனைந்துள்ளது. உண்மையில் இங்கே இருப்பது செமி ஆட்டோ மேட்டிக் சிக்னல் சிஸ்டம்தான். இது முழுக்க முழுக்க மென் பொருள்மூலம் இயக்கப்படுகிறது. இதில் தொழிலாளர்கள் யாரும் குளறுபடி செய்யவே முடியாது.

 

சத்தீஸ் பிரபு, லட்சுமி என்ற அதிகாரிகள் டிராபிக் கன்ட்ரோலர்கள் மூன்று பேரை கட்டாயப்படுத்தியும் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தும் உள்ளேயே இருக்குமாறு கட்டாயப் படுத்தினார்கள். இந்த மூன்று பேர்களையும் போலீஸ்தான் உள்ளே சென்று வெளியே கொண்டு வந்தது. ஆனால் இதை மறைப்பதற்காக வேண்டுமென்றே எதிர்ப்புகார் கொடுத்து தொழிலாளர்கள் அதிகாரிகளை அடித்ததாக நிர்வாகம் பிரச்சாரம் செய்கிறது.

 

வண்டி சிக்னல், டிராக் உயர் மின்கம்பி ஆகியவற்றை தினந்தோறும் பராமரிக்கவேண்டும். பராமரிப்பு தொழிலாளர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் உள்ளனர். எனவே பராமரிப்பு முற்றிலும் நடைபெறவில்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

 

தொழிலாளர்கள் முழுமையாக வேலை நிறுத்ததில் ஈடுபடுவதால் ரயில் இயக்கம் முடங்கியுள்ளது. பயிற்சி பெறாதவர்களையும் உரிய தகுதி பெறாதவர்களையும் கொண்டு ரயில்களை இயக்க முயற்சிக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையும் தகுதியற்றவர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானதாகும், பயணிகள் பாதுகாப்பை புறக்கணிக்கிற சட்ட விரோத செயலாகும். இந்தப் போக்கைக் கைவிட்டு பேசித்தீ ர்க்க நிர்வாகம் முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close