மக்களவைத் தேர்தல் தோல்வி ஏன்? - தொகுதிவாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார் எடப்பாடி பழனிசாமி


சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19அன்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்றும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜூலை 10-ம் தேதி காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர், 11-ம் தேதி சிவகங்கை - வேலூர் - திருவண்ணாமலை, 12-ம் தேதி அரக்கோணம் - தஞ்சாவூர் - திருச்சி, 13-ம் தேதி சிதம்பரம் - மதுரை - பெரம்பலூர், 15-ம் தேதி நாகப்பட்டினம் - மயிலாடுதுறை - கிருஷ்ணகிரி, 16-ம் தேதி ராமநாதபுரம் - திருநெல்வேலி - விருதுநகர், 17-ம் தேதி தென்காசி - தேனி - திண்டுக்கல், 18-ம் தேதி பொள்ளாச்சி -நீலகிரி - கோயம்புத்தூர், 19-ம் தேதி விழுப்புரம் - கன்னியாகுமரி - ஆரணி ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் மட்டும் தவறாமல் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்’ என்றும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.