ஒற்றைத் தலைமை விவகாரம் இத்தனை பூதாகரமாக வெடிக்கும் முன்பே ஈபிஸ்சுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவர் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார். தற்போது, முக்குலத்தோரை ஈபிஎஸ் ஒதுக்குகிறார் என்று எழுந்திருக்கும் வாதங்களுக்கும் அவரே முன்னின்று விளக்கம் அளித்திருக்கிறார். அவரிடம் காமதேனுவுக்காக பேசியதிலிருந்து...
அதிமுகவில் இப்போது நடக்கும் பிரச்சினைக்கு ஒற்றைத் தலைமை விவகாரம் மட்டும் தான் காரணமா?
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யாரை தலைவராக்க வேண்டும், யாருடைய தலைமையில் இயங்க வேண்டும் என்று முடிவு செய்ய முழு உரிமை இருக்கிறது. அதன்படியே அவர்கள் ஈபிஎஸ்சை ஒற்றைத் தலைமையாக கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? அதுதானே ஜனநாயக மரபு. வெறும் இரண்டு டிஜிட் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தருகிறார்கள். இது தெரிந்தும் அவர் இன்னமும் விடாமல் இதைப் பிடித்துக்கொண்டு தொங்குவதுதான் பிரச்சினைக்குக் காரணம்.
திருச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளரான நீங்கள் ஈபிஎஸ் பக்கமும், மாநகர் மாவட்டச் செயலாளரான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கமும் பிரிந்திருக்கிறீர்கள். இதனால் திருச்சி அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறதா?
அதெல்லாம் ஒன்றும் கிடையாது. வெல்லமண்டி நடராஜனையும், அவரது மகனையும் தவிர வேறு யாரும் ஓபிஎஸ் பக்கம் செல்லவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த மூன்று நாட்களாக வெல்லமண்டி நடராஜன் அவரது அலுவலகத்தில்தான் இருக்கிறார். நான்கைந்து பேரைத்தவிர வேறு யாரும் அந்த அலுவலகத்தின் பக்கமே செல்லவில்லை.
திருச்சி மாநகரில் பொதுக்குழு அந்தஸ்தில் உள்ளவர்கள் 18 பேர் இருக்கிறார்கள். அவர்களின் வெல்லமண்டியை சேர்த்து மொத்தம் மூன்று பேர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் போயிருக்கிறார்கள். மீதமுள்ள 15 பேரும் ஈபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். பிறகு எப்படி பிளவு என்று சொல்ல முடியும்? தஞ்சாவூரில்கூட சரிபாதி பிளவு என்பதெல்லாம் கிடையாது. அங்கே மாவட்டச் செயலாளர் கள் இருவர் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை நிர்வாகிகளும் ஈபிஎஸ் பக்கம் வந்துவிட்டார்கள்.
உண்மையில் ஓபிஎஸ்சை தலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்றி வைத்திலிங்கம் நினைக்கிறாரா... அல்லது ஈபிஎஸ் மீதான தனது பகையை தீர்த்துக்கொள்ள ஓபிஎஸ்சை பகடையாகப் பயன்படுத்துகிறாரா?
ஓபிஎஸ் மீது வைத்திலிங்கத்திற்கு தனிப்பட்ட அபிப்பிராயம் மரியாதை எல்லாம் கிடையாது. அவரை வைத்திலிங்கம் பகடைக்காயாகத்தான் பயன்படுத்துகிறார். யாருக்காகவோ அவர் இதைச் செய்கிறார். இப்படி செய்வதன் மூலம் தன்னை ஒரு பெரிய தலைவராக காட்டிக்கொள்ள வைத்திலிங்கம் முயற்சிக்கிறார்; அவ்வளவுதான்.
அதிமுகவில் வைத்திலிங்கமும் முக்கிய தலைவர்தானே... கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இதற்கு மேல் ஏன் அவர் தலைவராக காட்டிக்கொள்ள மெனக்கிட வேண்டும்?
அப்படி இருப்பவர்தான் தற்போது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, தன்னை இன்னும் பிரதானப்படுத்தி பெரிய தலைவராக காட்டிக்கொள்ள விரும்புகிறார். மொத்தத்தில் ஓபிஎஸ்சை வைத்து வேறு யாரையோ முன்னிலைப்படுத்த அவர் விரும்புகிறார்.
வேறு யாரையோ என்றால்... சசிகலாவைச் சொல்கிறீர்களா?
இருக்கலாம்.
சசிகலாவை விட்டு அதிமுக வெகுதூரம் வந்துவிட்டது. இனிமேல் சசிகலாவை முன்னிறுத்துவதால் என்ன ஆகப் போகிறது?
அவர்களுக்குச் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். அதனால் இதைச் செய்யலாம்.
தன்னை பலிகடா ஆக்குகிறார்கள் என்பது ஓபிஎஸ்சுக்குத் தெரியாதா... இல்லை, தெரிந்தே உடன்படுகிறாரா?
தான் பகடைக்காயாகவே பயன்படுத்தப்படுகிறோம் என்பது ஓபிஎஸ்சுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் அதற்கு அவர் சம்மதிக்கக் காரணம், நத்திங்குக்கு சம்திங் பரவாயில்லை என்ற நினைப்பு தான்.
மூன்று முறை முதல்வராக இருந்தேன்... அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டேன் என்கிறாரே ஓபிஎஸ்..?
மூன்று முறை முதல்வராக இருந்ததெல்லாம் எத்தகைய சூழ்நிலையில்? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் முதல்வரானார். அம்மாவுக்கு விசுவாசியாக இருந்தேன் என்று சொல்வதெல்லாம் நடிப்பு. அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தவர் என்றால் இப்போது செய்வதெல்லாம் நியாயமாகி விடுமா? அம்மா இப்போது இருந்திருந்தால், ஓபிஎஸ் கருணாநிதியைப் புகழ்ந்தது, அவரது மகன் ஸ்டாலினைச் சந்தித்துப் பாராட்டியது இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டேன் என்கிறீர்கள்... இப்போது அம்மா இல்லாத சூழலில் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ஈபிஎஸ்சை ஏற்றுக்கொள்வது தானே சரியாக இருக்கமுடியும்?
உட்கட்சி ஜனநாயகம் பேசப்படும் ஒரு கட்சியில் தலைமைக்கான போட்டியில் ஒருவர் இறங்கினார் என்பதற்காக அவரைச் சுத்தமாக கட்சியிலிருந்து அப்புறப்படுத்துவது நியாயம்தானா?
அப்படியெல்லாம் அவரை சுத்தமாக அப்புறப்படுத்துவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரிடம் பேசும்போதெல்லாம் ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ்சைக் கொண்டு வருவோம், இரண்டாம் கட்டத் தலைவராக எப்போதும் போல் நீங்களே இருங்கள் என்றுதான் அவரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்தான் அதை விரும்பாமல், இவ்வளவு பிரச்சினைகளையும் செய்கிறார்.
நீங்கள் சட்டம் படித்தவர் என்பதால் கேட்கிறேன்... ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றம் சென்றிருப்பது ஈபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்றிருப்பது என்ற நிலையில் இந்த வழக்குகள் எதை நோக்கி நகரும்?
மக்கள் மன்றத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நீதிமன்றமும் பிரதிபலிக்க வேண்டும். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமைக்கு சரியானவர் என்று ஒரு முடிவெடுத்து செயல்படுத்தும் போது அதில் நீதிமன்றம் தலையிட்டு எதையும் செய்வது சரியாக இருக்காது. கட்சிக்குத் தலைமை என்பதை நீதிமன்றமோ காவல்துறையோ முடிவு செய்துவிட முடியாது.
பொதுக்குழுவில் நீதிமன்ற அவமதிப்பு நடந்ததாக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றிருக்கிறார்களே..?
நீதிமன்றம் அந்த 23 தீர்மானங்களையும் நிறைவேற்றலாம் என்று சொல்லியிருந்ததே தவிர நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அதனால் பொதுக்குழு அதை நிராகரித்து விட்டது. இந்திய அரசியல் சாசனமே 120 முறைக்கும் மேல் இதுவரை திருத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு என்ன தேவையோ அதை சட்டமாக்க வேண்டும் என்பதைத்தான் இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது.
அப்படி இருக்கையில், ஒரு கட்சிக்கு என்ன தேவை, அதன் தொண்டர்களுக்கு எது நன்மை என்று கருதி விதிகள் மாற்றப்படுவதும், திருத்தப்படுவதும் இயல்பான ஒன்றுதான். அது ஜனநாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சட்டப்படி செல்லக்கூடிய ஒன்று. அதனால் அதிமுக பொதுக்குழுவில் சட்டவிரோதமாக எதுவும் நடக்கவில்லை. கட்சியின் விதிமுறைகளை திருத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லி கோர்ட்டுக்குச் செல்லமுடியாது.
ஜனநாயக ரீதியில் இயங்கும் கட்சி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்... ஆனால் ஜனநாயக முறைப்படி பொதுக்குழுவில் உரிமைக்குரல் எழுப்பிய ஒருவரை அதுவும் ஒரு முன்னாள் முதல்வரை தண்ணீர் பாட்டிலால் தாக்குவது என்பதெல்லாம் சரிதானா?
யாரும் அவரை அப்படி எல்லாம் தாக்கவில்லை. ஆனால், துரோகி என்று குரல் கொடுத்தார்கள். இப்படி கட்சியை சிக்கலுக்கு ஆளாக்குபவரை, பொதுக்குழு நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் செல்கிறவரை துரோகி என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்ல முடியும். அவரை யாரும் தாக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் இன்னொரு சண்முகத்தைப் பிடித்து திரும்பவும் நீதிமன்றம் சென்றிருக்கமாட்டாரா?
திட்டமிட்டபடி 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா?
நிச்சயம் நடக்கும். அவர் யாருடைய தூண்டுதலின் பேரிலோ நீதிமன்றம் சென்றிருக்கிறார். ஆனால், தொண்டர்களின் உறுதியும் முடிவும் 11-ம் தேதி பொதுக்குழு நடக்க வேண்டும் என்பதுதான். அது நடக்கும், அதில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படுவார்; இது உறுதி.
டெல்டாவில் வைத்திலிங்கத்தின் பிடி தளர்ந்துவிட்டதா?
டெல்டாவில் அவருடைய சர்வாதிகாரத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. டெல்டாவில் தன்னைத் தவிர வேறு யாரும் வளரக்கூடாது என்று அவர் நினைத்தார். மீறி வளர்ந்தவர்களை எல்லாம் அழித்தார். இப்போது அவரே வீழ்ச்சியடைந்து அரசியல் அஸ்தமனத்தில் இருக்கிறார். இனி டெல்டாவில் அதிமுக ஆரோக்கியமாக வேகமாக வளரும்.
ஈபிஎஸ்சுக்கு ஆதரவாக கவுண்டர்களும் வன்னியர்களும் கைகோத்து நிற்கிறார்கள்... ஆனால், தங்கள் சாதிக்காரரான ஓபிஎஸ்சை கட்சியின் முக்குலத்து நிர்வாகிகள் கைவிட்டுவிட்டார்கள் என்கிறார்களே..?
அதிமுக என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதில் சாதிக்கும் மதத்திற்கும் வேலை இல்லை. அது ஒருபக்கம். இன்னொரு பக்கம் இந்த கட்சியில் முக்குலத்தோர் யாராவது வளர்ந்தால் அவர்களைக் கட்சியைவிட்டு அப்புறப்படுத்துவது தான் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்களின் செயலாக இதுவரை இருந்திருக்கிறது. அப்படிப்பட்டவரின் பின்னால் முக்குலத்தோர் எப்படிச் செல்வார்கள்?
ஓபிஎஸ்சுக்கு எப்போதுமே முக்குலத்தோர் மீது அக்கறை எல்லாம் கிடையாது. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி முக்குலத்தோருக்காக எதையும் செய்தது கிடையாது. அதேபோல வைத்திலிங்கமும் முக்குலத்தோர் பலரை அழித்துவிட்டுத்தான் மேலே வந்தார். அப்படி இருக்கும்போது அவர்களை எப்படி முக்குலத்தோர் ஆதரிப்பார்கள்?