[X] Close

மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் யானைகள்!- பேருயிரின் கண்ணீரை துடைப்போமா?


  • kamadenu
  • Posted: 27 Apr, 2019 09:07 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

இந்த உலகில் சில விஷயங்கள் எப்போதும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, யானைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையை விரும்பாதவர்கள் உண்டா? விநாயகப் பெருமானின் அம்சமாகவே யானையை வழிபடுவர் இந்து மதத்தினர். மன்னர் காலத்தில் யானைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் அளவில்லாதது.  இப்படி, ஆதி காலத்தில் இருந்தே மக்களின் மனம் கவர்ந்த யானைகள், இன்று அதே மக்களாலேயே அழிந்து வருகின்றன. வாழ்விடங்கள் பறிபோய், உணவும், தண்ணீரும் தேடி அலையும்போது மின் வேலிகளில் சிக்கியும், ரயில் மோதியும், அவுட்டுக்காயால் உடல் சிதைந்தும், வேட்டைக்காரர்களால் சுடப்பட்டும் பரிதாபமாய் உயிரிழக்கின்றன இந்த பேருயிர்கள். இவற்றின் கண்ணீருக்கு விடை கிடைக்குமா?

உலகைப் பாதுகாக்கும் வனத்தின் ஆதார உயிரினமே யானைகள்தான். இவை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் என்ற இரு  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஏறத்தாழ  50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை யானைகள் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 30 ஆயிரம் யானைகள் வாழ்கின்றன. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட யானைகள் தமிழ்நாடு, கர்நாடக, கேரள மாநிலங்களில்தான் இருக்கின்றன.

நீலகிரி உயிர்க்கோள காப்பகம்!

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நீலகிரி உயிர்க்கோள காப்பகம் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழும் பகுதியாகத் திகழ்கிறது. இதனாலேயே, இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது நீலகிரி உயிர்க்கோள காப்பகம்தான்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கோவை முதல் மன்னார்க்காடு, அமைதிப் பள்ளத்தாக்கு, வயநாடு, முதுமலை, பந்திப்பூர், நாகர்கொளே, சத்தியமங்கலம், கொள்ளேகால் பகுதிகளில் யானைகள் உலவுகின்றன. தக்காணபீடபூமியான பந்திப்பூர், வயநாடு, நாகர்கொளேவிலிருந்து சமவெளியான கோவை, சத்தியமங்கலம் பகுதிக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான யானைகள் வலசை செல்கின்றன.

ஆனால், யானை வலசைப் பாதைகளில் ஆக்கிரமிப்பு, காடுகளில் யானைகளுக்குத் தேவையான தண்ணீரும், உணவும் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் வழித்தடம் சுருங்கி, வலசைப் பாதையில் செல்ல முடியாத நிலை உருவாகி, குடியிருப்புகளை நோக்கித் திரும்புகின்றன யானைகள். இதனால்,  யானை-மனித மோதல் ஏற்பட்டு,  யானைகளால் மனிதர்களும், மனிதர்களால் யானைகளும் கொல்லப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமல்ல, யானைகள் வேறு கூட்டத்துடன் இணை சேருதலும் பாதிக்கப்பட்டு, பன்முக மரபணு மாற்றம் தடுக்கப்பட்டு, ஆரோக்கியமான யானைக் கூட்டம் உருவாவதும் தடைபடுகிறது.

ஆக்கிரமிப்பும், நெறியற்ற சுற்றுலாவும்...

யானைகளின் வலசைப் பாதைகளில் பெருகிவரும் கட்டடங்கள், அனுமதியற்ற சுற்றுலா, வன உயிரின வாழ்விடங்களில் நடத்தப்படும் கேளிக்கை நிகழ்வுகள்,  இரவு சஃபாரிகள் என நெறியற்ற சுற்றுலாக்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைப் பாதிக்கின்றன.

நீலகிரி மலைப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்கள், ஹோட்டல்களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்  விஷயம். இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்தது வேதனைக்குரிய சம்பவம். இதேபோல, பயிர்களைக் காக்க விவசாயிகளால் அமைக்கப்படும் மின் வேலிகள், யானைகளின் உயிருக்கு எமனாக மாறும் சம்பவங்கள் தொடர்வது, யானைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது. இப்படி பல நெருக்கடிகளால் கண்ணீர் வடிக்கும் யானைகளின் துயர் துடைக்க என்ன செய்யலாம்? பல கேள்விகளுடன்  ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாசனை அணுகினோம்.

“மேட்டுப்பாளையம் பகுதியில் அண்மையில் 2 ஆண் யானைகள் உயிரிழந்துள்ளன. சில நாட்களுக்கு முன் பாக்குத் தோப்பில் புகுந்த ஒரு யானை, பாக்கு மரத்தை சாய்க்கும்போது,  அங்குள்ள  மின் கம்பியில் உரசி, மின்சாரம் தாக்கி பரிதாபமாய் உயிரிழந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன் சிறுமுகை பகுதியில், சட்டவிரோத மின் வேலியில் சிக்கி ஒரு யானை இறந்தது. இரண்டுமே மின்சாரம் சார்ந்தது.

பொதுவாக, வனத் துறை மட்டும் தான் யானைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படி அல்ல. யானைகளின் பாதுகாப்பில் எல்லாத் துறைகளின் பங்களிப்பும் உள்ளது. குறிப்பாக, மின் வாரியத்தின் பங்கு அதிகம்.

தாழ்வான மின் கம்பிகள்!

பாக்கு மரத்தை சாய்க்கும்போது, தாழ்வாகச் சென்ற மின் கம்பி உரசியதில்தான் யானை இறந்துள்ளது. மேகமலை பகுதியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 3 முறை மின்சாரம் தாக்கி யானைகள் இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை ஆய்வு செய்து, அவற்றை உயரே செல்லுமாறு மாற்றியமைக்க வேண்டும். அல்லது நிலத்துக்கு அடியில் மின் வயர்கள் செல்லுமாறு அமைக்க வேண்டும்.

அடுத்த பிரச்சினை சட்டவிரோத யானை தடுப்பு மின் வேலி. வேட்டையைக் காட்டிலும் ஆபத்தானவை சட்டவிரோத மின் வேலிகள். நாடு முழுவதும் பல பகுதிகளில் சட்டவிரோத மின் வேலிகளால் யானைகள் உயிரிழக்கின்றன. எனவே, சட்டவிரோத மின் வேலி அமைப்பவர்களுக்கு, நிரந்தரமாக மின்சாரத்தை துண்டிப்பது என்ற கொள்கைமுடிவை மின் வாரியம் எடுக்க வேண்டும். சட்டவிரோத மின் வேலிகள் யானைகளை மட்டுமின்றி, அப்பாவி மக்களையும், சில சமயங்களில் மின் வேலியை அமைத்தவர்களையேயும் கொல் கின்றன.  எனவே, ஆண்டுதோறும் காட்டை ஒட்டிய பகுதிகளில், சட்டவிரோத மின் வேலிகள் அமைக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள், தங்களது விளை நிலத்தைப்  பாதுகாக்கத்தான் மின் வேலி அமைக்கிறார்கள். யானையைக் கொல்ல வேண்டுமென்பது அவர்களது நோக்கம் அல்ல. மின் வேலியில் சிக்கி ஒரு யானை இறந்தால், சம்பந்தப்பட்ட விவசாயியின் நிம்மதி பறிபோய்விடும். வழக்கு தொடர்பாக ஆண்டுமுழுவதும் அலைய வேண்டியிருக்கும். இந்திய வனச் சட்டத்தில், யானையைக் கொல்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, முறையான மின் வேலியை அமைக்க வேண்டும்.

முறையான மின் வேலிக்கு மானியம்!

நேரடி மின்சாரம் மற்றும் பாட்டரி மின்சாரம் மூலம் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள் யானைகளைக் கடுமையாகத் தாக்கி உயிரிழக்கச் செய்கின்றன. எனவே, யானைகளுக்கு மிக லேசான அதிர்வை மட்டுமே ஏற்படுத்தி, அவற்றை விரட்டியடிக்கும் தன்மை கொண்ட மின் வேலிகளை மட்டுமே அமைக்க வேண்டும். இந்த முறையான மின் வேலிகளை அமைக்கும் விவசாயிகளுக்கு, அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும், வனம் மற்றும் மின் வாரியத்தினர் இந்த மின் வேலிகளைக் கண்காணிக்க வேண்டும்.

யானைகளால் பயிரை இழக்கும் விவசாயி, தனது வாழ்வாதாரத்தைப் பறிகொடுக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவு. எனவே, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இழப்பீடு பெறும் முறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும். இழப்பீடு பெறுவதற்காக விவசாயியை அலையவைக்கும் நிலை கூடாது. அப்போதுதான், வன விலங்குகள் மீது விவசாயிகளுக்கு ஏற்படும் வெறுப்புணர்வைப் போக்க முடியும்.

வலசைப் பாதை பாதுகாப்பு

மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் யானைகள் இறப்பது சாதாரண சம்பவம் அல்ல. நீலகிரி உயிர்க்கோள மையத்தின் ஒரு பகுதிதான் கோவை வனக் கோட்டம். இதில்,  இரு பெரும் வலசைப் பாதைகளை இணைக்கும் பகுதி கல்லார். ஆனால், இந்த பாதை குறுகிவிட்டது. இப்பகுதியை கடக்க முடியாததால், வேறு பகுதிக்குச் செல்கின்றன யானைகள். அதேபோல, கோடைகாலத்தில் இப்பகுதியில் இடைவிடாது செல்லும்  வாகனப் போக்குவரத்தும், யானைகளைப் பெரிதும் தொந்தரவு செய்கிறது.

காலம்காலமாக உணவு இருக்கும் இடத்தை நோக்கி வலசை செல்லும் யானைகள், பல்வேறு தொந்தரவால் திசை திரும்புகின்றன. இதனால், அவை உணவு உள்ள இடத்தை இழக்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் யானை, பட்டினி கிடக்க நேரிடுகிறது. எனவேதான், அவை விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. இதையெல்லாம் தடுக்க,  கல்லார் யானை வலசைப் பாதையைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு தனி மேம்பாலம் அமைத்து, யானைகளின் வலசைப் பாதையை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு தோட்டக்கலைத் துறை சார்பில் பூங்கா உள்ளது. ஏற்கெனவே 2009-ல் நேரிட்ட நிலச்சரிவில் இந்தப் பூங்கா சேதமடைந்தது. யானைகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்கும் இடத்தில் உள்ள இந்தப் பூங்கா வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தை யானைகளுக்கு விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும்.

அதேபோல, யானைகள் கடக்கும் இடத்தை, தனியாரிடமிருந்து விலை கொடுத்தாவது வாங்கி, அவை தொந்தரவின்றிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். யானைகளின் பாரம்பரிய வழித்தடத்தை மீட்டுவிட்டால், அவை விளை நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்கலாம்.

பலியாகும் ஆண் யானைகள்!

அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஆண் யானைகள் பலியாவது. மின்சாரம் தாக்கி இறந்த இரு யானைகளுமே ஆண் யானைகள்தான். இந்தியாவில் உள்ள சுமார் 30 ஆயிரம் யானைகளில், 10-ல் ஒரு யானை மட்டுமே ஆண் யானையாக உள்ளது. அதாவது, 3,000 முதல் 5,000 ஆண் யானைகளே உள்ளன. ஒரு ஆண் யானையின் இழப்பு என்பது, எதிர்காலத்தில் யானைகளின் சந்ததி பெருகுவதைத் தடுக்கும். யானைகளின் இனப்பெருக்கத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் விஷயம் இது. ஏற்கெனவே, வேட்டையில் குறிவைக்கப்படுவதும் ஆண் யானைதான்.

யானைகளைப் பாதுகாக்க பல திட்டங்களை அமல்படுத்தும் சூழலில், யானைகள் எதிர்காலத்தைப் பாதிக்கும் செயல்களை முக்கியமானதாக கவனித்து, தீர்வுகாண்பது அவசியம்.

அதேபோல, சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடும் நெடுஞ்சாலைத் துறையினர், காட்டு விலங்குகளுக்கு தொந்தரவு செய்யாத அளவுக்கு சாலைகள் அமைக்க வேண்டும் என்பதை  கொள்கை முடிவாகவே மேற்கொள்ள வேண்டும்.

யானை தடுப்பு அகழி பராமரிக்கப்படுமா?

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க, யானை தடுப்பு அகழி வெட்டப்படுகிறது.  கோவை வனக் கோட்டத்தில் மட்டும் சுமார் 320 கிலோமீட்டர் தொலைவுக்கு யானை தடுப்பு அகழி வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அகழிகள் எங்கும் தொடர்ச்சியாக அமைந்திருக்கவில்லை.  மேடோ, பள்ளமோ இருக்கும் இடத்தில், யானை தடுப்பு அகழி அமைக்கப்படுவதில்லை. இதற்கு கூடுதல் செலவாகும் என்பதால், அந்த இடத்தை அப்படியே விட்டுவிடுகின்றனர். இது யானை தடுப்பு அகழி அமைக்கும் நோக்கத்தை சிதைத்து விடுகிறது. பல லட்சம் செலவு செய்து யானை தடுப்பு அகழி அமைத்தாலும், அகழி இல்லாத இடத்தை யானைகள் எளிதில் கடந்து சென்றுவிடுகின்றன.

 இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு அகழி வெட்டி, இரண்டு இடத்தை விட்டுவிட்டாலே, ஒட்டுமொத்த செலவும் விரயமாகிவிடும். அதேபோல, வெட்டப்படும் அகழிகளை முறையாகப் பராமரிப்பதும் அவசியமாகும். தொடர்ச்சியாக யானை தடுப்பு அகழிகள் வெட்டப்படுவதையும், முறையாகப் பராமரிக்கப்படுவதையும் மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும்.

மக்கள்-ஊராட்சி அலுவலர்கள் இணைந்து, இந்தப் பணியை மேற்கொள்ளலாம். 100 நாட்கள் வேலைத் திட்டத்தை, யானை அகழிகள் அமைக்கப் பயன்படுத்தலாம். முறையான அகழிகள் இருந்தாலே, பெரும்பாலான யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க முடியும்.

அதேபோல, ஒரு இடத்துக்கு யானைகள் தொடர்ந்து வருவதைத் தடுக்க வேண்டும். ரேடியோ காலர் பொருத்துவது, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் இதற்கு உதவும். மேலும், யானையை விரட்டும் பணியில் ஈடுபடும் வேட்டைத் தடுப்புக் காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு, தேவையான வசதிகளை செய்து தருவதுடன், அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும். தடாகம் போன்ற பகுதிகள், யானைகள் கடந்து செல்லும் பகுதிகள்தான். அங்கு யானைகள் நிரந்தரமாகத் தங்கும்போது, யானை-மனித மோதல் உருவாகிறது.

சின்னத்தம்பி யானையை விரட்டுமாறு விவசாயிகள் வலியுறுத்திய வேளையில், பழங்குடி மக்களின் கோரிக்கை அதற்கு நேர்மாறாக இருந்தது. யானைகளை விரட்டக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். காடு என்பது யானைகளுக்குச் சொந்தமானது. இந்த மனநிலை விவசாயிகளுக்கும் வர வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமே தவிர, யானையே இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது’’ என்றார்.

யானைகளுக்கு தொந்தரவு!

‘‘யானைகள் பாதுகாப்பில் காவல் துறையினருக்கும் பங்கு உண்டு. யானை மீது கல் வீசுவது, தாக்குவது, செங்கல் சூளைக்குள் விரட்டி, விளையாட்டு காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை காவல் துறையினர் தடுக்க வேண்டும். எந்த யானையும், விருப்பப்பட்டு மனிதர் குடியிருப்பில் நுழைவதில்லை. உணவும், தண்ணீரும் தேடித்தான், வேறுவழியின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைகின்றன.

எனவே, யானைகள் இருக்கும் வனத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். யானைகளின் 60 சதவீத உணவு புல்தான். களைச் செடிகளால் புற்கள் அழிகின்றன. எனவே, களைச் செடிகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அகற்றி, யானைகளுக்கு புற்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் கோடையில்கூட யானைகளுக்கு தண்ணீரும், புற்களும் கிடைக்கும். இதனால் நூற்றுக்கணக்கான யானைகள் அங்கு சென்று, பசியாறும். இந்த நிலையில், அப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.யானைகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்காமல் செய்தால், விவசாயம் செய்யும் பட்டா நிலத்துக்குள்தான் அவை நுழைய வேண்டியிருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close