அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் அரசு நிலத்தில் உள்ளஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கோட்டக்கரை - நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (33). தன் தாய் கல்யாணியுடன் பல ஆண்டுகளாக ராஜ்குமார் வசிக்கும் குடிசை வீடு இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை வகையை சேர்ந்தது என, வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ராஜ்குமார் வீட்டுக்கு பின்பகுதியில் உள்ள 15 வீட்டு மனைகளில் சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்தவீடுகளில் வசிப்பவர்கள், வெளியே சென்றுவர வழி இல்லாததால், மழைக்காலங்களில் மிகுந்த அவதியுற்று வருவதால் உரிய வழி ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்துவந்தனர்.

ஆகவே, வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ள ராஜ்குமாரின் குடிசை வீட்டை அகற்றி வழி ஏற்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக முன்னறிவிப்பு நோட்டீஸை ஏற்கெனவே வழங்கிய கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று ராஜ்குமார் வீட்டை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர்.

அப்போது, மின் இணைப்பை துண்டித்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், வீட்டை அகற்ற ராஜ்குமார் கால அவகாசம் கேட்டார். அதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், வீட்டுக்குள் சென்ற ராஜ்குமார், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இதனால், உடலில் பற்றி எரிந்த தீயுடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனையறிந்த தீயணைப்பு துறையினர், தீ அணைக்கும் ஸ்பேரேவை ராஜ்குமார் மீது அடித்துதீயை அணைத்தனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்குமார் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமானஅதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்களாக இடிக்கப்படுகின்றன. சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.