[X] Close

வீரப்பன் என்கவுன்ட்டரில் இடம் பெற்ற காவல் ஆய்வாளர் 15 ஆண்டு பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா முடிவு: தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை


15

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 07:44 am
  • அ+ அ-

வீரப்பனை என்கவுன்ட்டர் செய்த தனிப்படையில் இடம் பெற்று தற்போது ஆய்வாளராக உள்ள ஜவஹர் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை காவல்துறையில் மாதவரம் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பணி செய்து வருபவர் ஜவஹர். 1997-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். 2004-ல் வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக அதிரடிப்படையில் இடம் பெற்றிருந்தார். வீரப்பனைப் பிடிக்கும் தனிப்படையில் பணி செய்த அனைவருக்கும் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.3 லட்சம், பதக்கம், வீட்டுமனை மற்றும் பதவி உயர்வு வழங்கினார்.

அப்போது, உதவி ஆய்வாளராக இருந்த ஜவஹருக்கும் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக ஆய்வாளர் ஜவஹர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதனால், விரக்தியடைந்த ஆய்வாளர் ஜவஹர் தனக்கு அளிக்கப்பட்ட விருதையும், பதவி உயர்வையும் திரும்ப அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அவர் நேற்று மதியம் வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரனை நேரில் சந்தித்தார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 10 நாள் விடுப்பில் அமெரிக்காவில் இருப்பதால் அவர் சென்னை வந்த பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என போலீஸ் அதிகாரிகள் ஜவஹருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

யார் இந்த ஜவஹர்?

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்தவர். 1997-ல் நேரடி எஸ்ஐ.யாக பணியில் சேர்ந்தவர். துடிப்புடன் பணி செய்ததால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் சேர்க்கப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்தபோது தமிழகத்தில் நடைபெற்ற ராணுவ கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தின்போது கிண்டியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஜவஹர் கிணற்றில் குதித்து இளைஞரைக் காப்பாற்றினார்.

கொலை, கொள்ளை என 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய எண்ணூரைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரை துப்பாக்கி முனையில் கடந்த ஆண்டு கைது செய்தார்.

வடசென்னை பகுதியில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்த, பிரபல ரவுடி மாலைக்கண் செல்வத்தை ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். வட சென்னையில் டேங்கர் லாரி உரிமையாளர்களைக் கடத்தி பணம் பறித்த கும்பலையும் ஆய்வாளர் ஜவஹர் கைது செய்திருந்தார். 400-க்கும் மேற்பட்ட ரவுடிகளை இதுவரை கைது செய்துள்ளார்.

பழைய சர்வீஸ்படி...

இதுகுறித்து கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "எஸ்ஐ.யாக 10 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கப்படும். அதன் பின்னர், 7 ஆண்டுகளில் உதவி ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். வீரப்பன் என்கவுன்ட்டரில் பதவி உயர்வு அளிக்கப்பட்டோருக்கு அடுத்த பதவி உயர்வுபழைய சர்வீஸ்படிதான் வழங்கப்படும். அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்து பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது பழைய சர்வீஸ்படிதான் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், வீரப்பன் வேட்டையில் பதவி உயர்வு பெற்ற ஒருசில போலீஸ் அதிகாரிகள் அதிகார வட்டத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்தி மீண்டும் பதவி உயர்வு பெற்றுக் கொண்டனர். இதுவே தற்போது அனைத்து குழப்பத்துக்கும் மூல காரணம் என போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு

ஆய்வாளர் ஜவஹர் கூறும்போது, ‘‘பதவி உயர்வுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறேன். எனது கோரிக்கையை பரிசீலிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், அதிகாரிகள் எனது கோரிக்கையை கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்துகின்றனர்.

எனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய பதவி உயர்வு மற்றும் விருதினை திருப்பி அளித்துவிட்டு, பணியிலிருந்து விலகிக் கொள்வதன் மூலம், என்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காவது ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close