மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் தேங்கும் குப்பையை அள்ளுவது யார்? - 19 ஆண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் சேரும் குப்பையை யார் அள்ளுவது யார் என்ற பஞ்சாயத்து வேளாண் விற்பனைக் குழுவிற்கும், மாநகராட்சிக்கும் 19 ஆண்டுகளாக நீடித்து வந்தது. தற்போது ஆணையாளர் அதற்கு நிரந்தர தீர்வு கண்டுள்ளார். அதனால், பூ மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, வேளாண் விற்பனைக் குழு மூலம் வாங்கி, ஒருங்கிணைந்த விற்பனை வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்தம் 307 கடைகள் உள்ளன. இதில், 107 கடைகளை ஒருங்கிணைத்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகளை பூ வியாபாரிகளுக்கு சொந்தமாகவே வேளாண் விற்பனைக் குழு பத்திரப் பதிவு செய்து எழுதிக் கொடுத்தது. இந்த பூ மார்க்கெட்டை, கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.

இந்த மார்க்கெட்டில் பூக்கழிவுகள், நார்கள் போன்ற குப்பைகள், பூ மார்க்கெட் வளாகத்தில் தினமும் 2 டன் வரை சேருகின்றன. இதை அள்ளி பராமரிப்பதற்கு, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் மாதந்தோறும் வேளாண்விற்பனைக் குழுவிற்கு ஒரு கடைக்கு ரூ.600 வீதம் செலுத்துகிறார்கள். ஆனால், வேளாண் விற்பனைக்குழு இந்தக் குப்பையை அள்ளுவதில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். அதுபோல், மாநகராட்சிக்கு பூ வியாபாரிகள், கடைக்கான சொத்துவரி, பாதாளச் சாக்கடை வரி போன்ற வரிகளை செலுத்துகின்றனர்.

அதனால், மாநகராட்சி நிர்வாகம், பராமரிப்பு தொகையை வேளாண் விற்பனைக்குழுவிடம் கட்டினால் நாங்கள் எப்படி குப்பையை அள்ளுவது என்று தட்டிக்கழிப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இருந்த போதும் அவ்வப்போது இங்கு மலைபோல் குவியும் குப்பையை மாநகராட்சி தான் மனிதாபிமான அடிப்படையில் அள்ளுகிறது. தினந்தோறும் மார்க்கெட் வளாக குப்பையை மாநகராட்சி அள்ளுவதில்லை. அதனால், மார்க்கெட் திறந்தது முதல் கடந்த 19 ஆண்டாகவே, மார்க்கெட் குப்பையை யார் அள்ளுவது என்ற பஞ்சாயத்து வேளாண் விற்பனைக் குழுவிற்கும், மாநகராட்சிக்கும் இடையே நீடித்து வந்தது.

யார் ஆணையாளராக வந்தாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமலே இருந்தது. வியாபாரிகளும், அன்றாடம் குப்பைகளுக்கு மத்தியில் பூ வியாபாரம் செய்து வந்தனர். மழை பெய்தால், குப்பையும், மழைநீரும் சேர்ந்து சேறும், சகதியுமாக மாறி மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமாரை, மாட்டத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக பேசினர். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினைக்கு ஆணையாளர் தினேஷ்குமார் தற்போது தீர்வு கண்டிருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,"மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து, மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளையும், அன்றாடம் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி பணியாளர்கள் வராதது குறித்தும் ஆதங்கம் தெரிவித்தோம். அதற்கு ஆணையாளர், "பராமரிப்பு தொகையை வேளாண் விற்பனைக் குழுவிடம் வழங்கினால், நாங்கள் எப்படி குப்பையை அள்ள முடியும் என்றும், அந்த பராமரிப்பு தொகையை எங்களிடம் வழங்கினால் நாங்கள் அதனை அப்புறப்படுத்துகிறோம் என்றும் கூறினார்.

அதற்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவித்து அடுத்த மாதம் முதல் 307 கடைகளுக்கான பராமரிப்பு தொகையை மாநகராட்சியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். அப்படி வழங்கும் பட்சத்தில் குப்பையை தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை கொண்டு அகற்றுவதாக ஆணையாளர் தினேஷ்குமார் உறுதியளித்துள்ளார்” என ராமச்சந்திரன் கூறினார்.