[X] Close

நீதித்துறை மீது பிரதமர் மோடி அலட்சியம்: அசோக் கெலாட் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

நீதித்துறையில் நிலவும் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அலட்சியம் காட்டி வருவதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜோத்பூர் தொகுதியில் அசோக் கெலாட் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நீதித்துறை தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒட்டுமொத்த தேசமே நீதித்துறை குறித்து கவலையடைந்துள்ளது. ஆனால், நமது நாட்டின் பிரதமரோ, அதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றம்சாட்டி, அதன் 4 நீதிபதிகள் கடந்த ஆண்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அன்றைக்கே அந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும். அன்று அலட்சியமாக இருந்த காரணத்தாலேயே, தற்போது நீதித்துறையில் மீண்டும் ஒரு பிரச்சினை முளைத்திருக்கிறது. எனவே, இப்போதாவது, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அதன் முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரஞ்சன் கோகோய், நீதித்துறை கடும் நெருக்கடியிலும், சதியிலும் சிக்கியிருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close