[X] Close

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு


24

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 07:54 am
  • அ+ அ-

-கி.மகாராஜன்

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க, மருத்துவக் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருக்கலைப்பு தொடர்பாக ஒரு நாளிதழில் வெளியான செய்தியை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்த மனு:மருத்துவக் கருக்கலைப்புச் சட்டப்படி 20 வாரத்துக்கு உட்பட்ட கருவைக் கலைக்க அனுமதி உள்ளது. அதே நேரத்தில் 20 வாரங்களுக்குப் பிறகே கருவின் குறைபாடுகள், மன வளர்ச்சி குறைபாடு தெரியவரும். 20 வாரங்களுக்கு பிறகு கருவில் குறைபாடு இருப்பது தெரிந்து, அந்த கருவைக் கலைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் கருக்கலைப்புக்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் 1.6 கோடி கருக்கலைப்புகள் நடக்கின்றன. இதில் 81 சதவீத கருக்கலைப்புகள் வீடுகளில் பாதுகாப்பற்ற முறையில் நடக்கின்றன. இதனால் தினமும் சராசரியாக 13 பெண்கள் மரணமடைகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.70 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களில் 17 லட்சம் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க வேண்டும். மருத்துவக் கருக்கலைப்பு சட்டப்படி 20 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பிறகு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

அதே நேரத்தில், 20 வார கருவில் குறைபாடுகளை கண்டறிவது சிரமம் என மருத்துவர்களே கூறி வருகின்றனர். இதனால் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த வேண்டியது அவசியம்.

பாலியல் வன்முறை அதிகரிப்பு

பாலியல் வன்முறைச் சம்பவங்களால் கருவைச் சுமக்கும் இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோரும் 20 வாரம் கடந்த கருவைக் கலைக்க நீதிமன்றங்களை நாடும் நிலை உள்ளது. இந்தியாவில் 2012-ல் 24 ஆயிரத்து 923 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. 2016-ல் 38 ஆயிரத்து 947 ஆக இது உயர்ந்துள்ளது. இதன்மூலம், பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு இறப்பைக் காட்டிலும் கொடுமையானது.

எனவே, மருத்துவ கருக்கலைப்புச் சட்டம் 1971-ல் கூறப்பட்டுள்ள கருக்கலைப்பு செய்வதற்கான கால வரம்பை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்த வேண்டியது அவசியம். இதற்காக, மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971-ல் உரிய திருத்தம் செய்து திட்ட முன்வரைவு 2014-ல் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த திட்ட முன்வரைவு அடிப்படையில் கருக்கலைப்புக்கான கால வரம்பை உயர்த்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். அதேபோல் அனைத்து மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளிலும் நவீன ஸ்கேன் மையங்களை நிறுவ வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close