[X] Close

அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு ரத்தம் செலுத்தப்பட்டது காரணமல்ல: சிறப்பு குழுவினர் ஆய்வு அறிக்கை தாக்கல்


15

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 07:48 am
  • அ+ அ-

ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கவில்லை என்று சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் தகுதியில்லாத ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரத்தம் பாதுகாப்பானதுதான் என டாக்டர்கள் சான்று அளிக்கப்பட்ட பின்னரே கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) ருக்மணி ஆகியோருக்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்துள்ளனர்.

குழுவினரின் ஆய்வு அறிக்கை குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் கேட்டபோது, “ஆய்வு குழுவினர் ரத்த வங்கிகளில் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர். கர்ப்பிணிகள் இறப்புக்கும் ரத்தம் செலுத்தப்பட்டதற்கும் தொடர்பு இல்லை. ரத்தம் உடலில் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கு ஏற்றப்பட்ட ரத்தம் சுத்தமான ரத்தம் என்பது ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ரத்த வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், ரத்த வங்கிகளை மேம்படுத்துவது பற்றியும் ஆய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close