திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணி, பொருட்கள் சேதம்


திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான துணி, பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கோவை மாநகர் காளபட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசர். இவர் திருப்பூர் ஏவிபி சாலையில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு ஊழியர்கள் பனியன் நிறுவனத்துக்கு பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

இதையடுத்து ஊழியர்கள் பதறியடித்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு துணி இருப்பு வைக்கப்படும் அறை, நூல் கோன்கள், அட்டைபெட்டிகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. நிறுவன ஊழியர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்புத் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.