[X] Close

இரு பாலின தன்மை குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 07:50 am
  • அ+ அ-

இரு பாலின தன்மையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண்குமார், இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜாவை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து 31.10.2018-ல் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வர கோயிலுக்குச் சென்றனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கோவில் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும் இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் தங்களது திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்து தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் மட்டுமே இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய முடியும். ஆண்- திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய முடியாது என சார் பதிவாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து மாவட்டப் பதிவாளரிடம் மனு அளித்தனர். அவரும் திருமணத்தைப் பதிவுசெய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தங்களின் திருமணத்தை இந்து திருமணச் சட்டப்படி பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சிவசங்கரி, கிருஷ்ணவேணி ஆகியோர் வாதிட்டனர்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வெளிப்படையான தோற்றத்தை வைத்து எதையும் எடை போடக்கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்துள்ள அன்பையும் பார்க்க வேண்டும். திருநங்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர் அந்தஸ்து வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கான சட்டப்படியான உரிமைகளை மறுக்க முடியாது. திருநங்கைகள் ஆணாகவோ, பெண்ணாகவோ வாழ உரிமை உண்டு. சட்டப்படியான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

பாலின வேறுபாடு காரணமாக திருநங்கைகளை வீட்டை விட்டு வெளியேற்றும் சூழல் உள்ளது. திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் இரு பால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவறானது. இதனால் இருபால் தன்மையுடன் பிறக்கும் குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

திருமணம் பதிவு செய்ய உத்தரவுஇந்த வழக்கில் மனுதாரர்களின் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரின் திருமணத்தையும் பதிவு செய்ய வேண்டும். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கான சலுகைகளைப் பெற மனுதாரர்களுக்கு தகுதியுள்ளது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close