[X] Close

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 07:32 am
  • அ+ அ-

தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்போவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்தது. வாக்குகள் பதியப்பட்ட மின்னணு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் ஒதுக் கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் ‘ஸ்டிராங் ரூம்’களில் பல்வேறு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் களின் முகவர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாசில்தார் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:மதுரையில் ஆய்வு நடத்துவதற்காக சென்ற கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, இன்று ( ஏப்.23) அறிக்கை அளிப்பார். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் பல்வேறு விவரங்களை கோரியுள்ளது. அத்தனை விவரங்களையும் உள்ளடக்கி அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தை பொறுத்தவரை, துணை ராணுவப்படை, ஆயுதப்படை காவலர்கள், காவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் என எல்லோரும் எங்கு இருக்க வேண்டும் என்று கையேட்டில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர தேர்தல் நடத்தும் அதிகாரி எத்தனை முறை அங்கு ஆய்வு நடத்தவேண்டும், எப்போது போக வேண்டும் என்பன தொடர்பான விஷயங்களும் கையேட்டில் தரப்பட்டுள்ளது. அதன்படி அவர் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி தவிர மாவட்ட எஸ்பியும் எப்போதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் செயல்படுவார்கள்.

இதை உறுதிசெய்யும் விதமாக, 24-ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. இதில் தேர்தல் பிரிவு டிஜிபியும் இடம் பெறுவார். அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படும்.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் ‘ஸ்டிராங் ரூம்’ முன் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அங்குள்ள நிகழ்வுகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தபடியே ஆய்வு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close