[X] Close

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா குழுமம் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 18:28 pm
  • அ+ அ-

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளை கண்காணிக்கு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜூன் மாதம் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது. ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும், ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது.

பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தினர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வேதாந்தா நிறுவன சட்டபிரிவு பொது மேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர், மின்சார வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான மனுவை பிப்ரவரி 22-ம் தேதி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

இணைப்பு மனுதாரர்களின் கோரிக்கையை இடைக்கால மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வேதாந்தா குழும மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க மறுத்துவிட்டனர். வழக்கு குறித்து தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி ஆட்சேபனை மனுக்களை அனுமதித்துக்கொண்டே இருந்தால் மனுவை முடிப்பதற்கு நாளாகும் என்றும், ஆலையை பராமரிக்க வேண்டுமென்ற இடைக்கால கோரிக்கையையும், ஆலையை திறக்க வேண்டுமென்ற கோரிக்கையை விரைந்து விசாரிக்க வேண்டுமென வாதிட்டார்.

மேலும் அரசு பராமரிக்கும் பணிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஆலை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க அரசால் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வேதாந்தா வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில், மத்திய வனத்துறை அமைச்சகத்தையும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையும் உறுப்பினர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் 40 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை எல்லாம் ஏற்பதா? என்பதை விசாரித்த பிறகே, பிரதான வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும் என தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close