[X] Close

தமிழகத்துக்கு நோக்கி புயல் வர வாய்ப்புள்ளதா?- என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 16:11 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

வரும் 29-ம் தேதி தமிழகக் கடற்கரையை நோக்கி புயல் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனத்தால் மழை பெய்துவந்தது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வாட்டி வதைத்து வந்த வெயில் தாக்கம் ஓரளவுக்கு குறைந்து குளிரத் தொடங்கியது. இதனால் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் தவித்து வந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சூழலில், சென்னையில் உள்ள இந்திய வானிலை மையம் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், "வரும் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதுமேலும் வலுவடைந்து வரும் 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து 27, 28 தேதிகளில் மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து 29-ம் தேதி புயலாக மாறும்.

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதியிலிருந்து இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்" எனத் தெரிவித்துள்ளது.

பிரதீப் ஜான் பேட்டி

கோடை காலத்தில் புயல் உருவாகுமா?, அதிலும் தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதா என்ற சந்தேகத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம் தி இந்து தமிழ்திசை(ஆன்-லைன்) சார்பில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது:

கோடைகாலத்தில் பெரும்பாலும் வெப்பம் காரணமாக அழுத்தம் அதிகமாக இருப்பதால் சிறிய அளவு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் கூட அது புயலாக மாறுவதுபோன்றதுதான் நமகக்கு தெரியும். ஆனால், பெரும்பாலும் கோடைகாலத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் குறைவு.

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாளை முதல் வெப்பச்சலனத்தால் கிடைக்கும் மழை குறைந்துவிடும்.அடுத்து வரும் நாட்களில் மாவட்டங்களில் மழை இருக்காது.

ஏறக்குறைய இன்னும் ஒருவாரம் வரை இருக்கும் போது முன்கூட்டியே தீர்மானமாக புயல் உருவாகும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இப்போது உறுதியாகக்கூற முடியாது. இன்னும் குறைந்தபட்சம் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் வானிலை மாதிரிகளை(மாடல்ஸ்) நாம் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு ஆய்வு செய்யும் போது உண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா அல்லது வலுவிழந்து செல்லுமா என்பது தெரியவரும்.

இதற்கு முன் கோடை காலத்தில் மழை வருவதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கிறதே தவிர புயல்உருவாகினாலும் அதை திசைமாறி சென்றிருக்கின்றன. தமிழகத்தை நோக்கி வந்தது மிகவும் அரிதான நிகழ்வு. கடைசியாக கடந்த 1966-ம் ஆண்டில் கோடையில் ஏற்பட்ட புயல் கூட பர்மாவை நோக்கி சென்றுவிட்டது.

ஆதலால் இப்போது உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகூட புயலாக உருவாகுமா என்பதும் அவ்வாறு உருவானால், தமிழகத்தை நோக்கி நகருமா என்பதை இப்போதே என்னால் கூற இயலாது.

அதிலும் யூரோப்பியன் சென்ட்டர் ஃபார் மீடியம்-ரேஞ்ச் வெதர் ஃபோர்காஸ்ட்(இசிஎம்டபிள்யுஎப்) கூறும் கணிப்பின்படி இந்த புயலால் தமிழகத்துக்கு 2 ஆயிரம் மில்லிமீட்டர் மழை பெய்யும் என்று இப்போது கூறுகிறது. ஆனால், கோடைகாலத்தில் தமிழகத்தில் அதுபோன்ற சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை. மற்ற வானிலை கணிப்புகளும் புயல்உருவாவதற்கான சாத்தியங்கள் குறித்து கூறவில்லை.

நிச்சயம், அடுத்த சில நாட்களில் கணிப்புகள் மாறும் என்று நினைக்கிறேன். அப்போது இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகருமா அல்லது புயல் உருவாகுமா என்று கூற முடியும். என்னைப் பொருத்தவரை இப்போதுள்ள கணிப்புகளின்படி 50 சதவீதம் மட்டுமே புயல் உருவாக வாய்ப்பு அதிலும் 50 சதவீதம் மட்டுமே தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு. இல்லாவிட்டால், இந்த  புயல் மியான்மர் அல்லது வங்கதேசம் நோக்கி செல்லவேவாய்ப்பு உண்டு.

சென்னையின் தண்ணீர்  பற்றாக்குறையைத் தீர்க்க நிச்சயம் மழை தேவை. தமிழகத்துக்கும் மழை தேவை. எனக்கும் மழை பெய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இன்னும் 2 நாட்களில் புயல்குறித்த தெளிவான உருவம் கிடைத்துவிடும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close