[X] Close

பொன்பரப்பி தாக்குதல்: 24, 25 தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்; திருமாவளவன் அறிவிப்பு


24-25

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 14:06 pm
  • அ+ அ-

பொன்பரப்பியில் தலித்துகள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் செந்துறை ஒன்றியத்திலுள்ள பொன்பரப்பி என்னுமிடத்தில், ஏப்ரல்-18, 2019 வாக்குப்பதிவு நாளன்று சாதிவெறியர்கள் மற்றும் மதவெறியர்கள் கூட்டுசேர்ந்து தலித் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்து நடத்திய கொலைவெறித் தாக்குதலை நாடே அறியும்.

தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் அப்படி இழைத்த குற்றம் தான் என்ன? அவர்கள் தலித்துகள் என்பதைத் தவிர; அத்துடன் கட்டுக்கோப்பாக இருந்து தங்களுக்கு விருப்பமான பானை சின்னத்துக்கு வாக்களித்தார்கள் என்பதைத் தவிர, அவர்கள் வேறென்ன குற்றமிழைத்தார்கள்?

பொன்பரப்பியில் அன்று என்ன தான் நடந்தது? காலை வேளையிலேயே தலித்துகள் ஏராளமானவர்கள் மிகுந்த பேரார்வத்துடன் தங்களின் வாக்குகளைப் பெரும்பாலும் பதிவு செய்து விட்டனர். தலித் இளைஞர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, வயது முதிர்ந்தவர்களையும் வண்டிகளில் கொண்டு வந்து வாக்களிக்க வைத்தனர்.

இதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத சாதி, மத வெறியர்கள், வாக்குச்சாவடிக்கு வந்த தலித் மக்களை, குறிப்பாக, பெண்களை மிகவும் இழிவாகப் பேசி, காவல்துறையினரின் முன்னிலையிலேயே அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன், பானை சின்னத்தின் மீதான வெறுப்பால் வாக்குச்சாவடியின் முன்னால் பானைகளைப் போட்டு உடைத்துப் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். அதனையும் மீறி அமைதியாக தலித்துகள் வாக்களிப்பதைத் தொடர்ந்தனர்.

இதனால் ஆத்திரப்பட்ட சாதி - மத வெறிக்கும்பல், அக்கம்பக்கமுள்ள ஊர்களிலிருந்தும் ஆட்களைத் திரட்டி, 200-க்கும் மேற்பட்டவர்கள் உருட்டுக்கட்டைகள், உருட்டுக்கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் அப்பாவி தலித் மக்களின் குடியிருப்புக்குள்ளே புகுந்து கொலை வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கண்ணில்பட்ட அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். வீட்டுக்கூரைகளில் வேயப்பட்டிருந்த ஓடுகள், தட்டுமுட்டுச் சாமான்கள், இருசக்கர வண்டிகள் போன்றவற்றைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர். இருசக்கர வண்டிகள் சிலவற்றைத் தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர்.

"பானை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாயா" என்று கேட்டு ஒருவரின் விரலை ஒடித்துள்ளனர். அவரது விரல் எலும்பு முறிந்து சதையைக் கிழித்துக்கொண்டு வெளியே துருத்திக் கொண்டுள்ளது. இத்தாக்குதலில் சுமார் ஐம்பது பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் பொது மருத்துவமனையிலும் மற்றவர்கள் ஜெயங்கொண்டம் பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையால் நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துகளால் வாக்களிக்க இயலவில்லை. பொன்பரப்பியில் நடந்த இக்கொடூரத்தால் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த கிராமங்களைச் சார்ந்த தலித்துகளும் அச்சத்துக்குள்ளாகி பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்களிக்கச் செல்லாமல் தவிர்த்தனர் என்றும் தெரியவருகிறது.

இது கட்சிகளுக்கிடையில் நடந்த வழக்கமான தேர்தல் வன்முறையல்ல. சாதியின் பெயரால் தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஃபாசிச ஒடுக்குமுறையாகும். தலித்துகளின் வாக்குரிமையைப் பறிப்பது, வன்முறை வெறியாட்டம் நடத்துவது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்குகள் போடுவது போன்ற சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அனைத்து தரப்பு எளியோரையும் அச்சுறுத்தும் அடக்குமுறை போக்காகும்.

வழக்கம் போல தலித்துகள் மீது வீண்பழி சுமத்தி அவதூறு பரப்பி ஒட்டுமொத்தமாகப் பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில், பாமக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தலித் இளைஞர்கள் வாக்குச்சாவடிக்கு வந்த தலித் அல்லாத பிற சமூகத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாகவும் வன்னியர் சமூகத்தினரின் குடியிருப்பில் வன்முறை செய்ததாகவும் பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்கிராமத்தில் வன்னியர்கள் சுமார் மூவாயிரம் வாக்காளர்களைக் கொண்ட பெரும்பான்மையினராகவும் தலித்துகள் சுமார் 650 வாக்காளர்களை மட்டுமே கொண்ட மிகவும் சிறுபான்மையினராகவும் உள்ளனர். அத்துடன், அங்கே உள்ள நான்கு வாக்குச்சாவடிகளும் வன்னியர் மற்றும் பிற தலித் அல்லாத சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலுள்ள பள்ளி வளாகத்திலேயே உள்ளன. சுமார் ஒரு கிலோமீட்டர் கடந்து தான் தலித்துகள் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் தலித் இளைஞர்கள் பிற சமூகத்தினரைத் தாக்கினார்கள் என்பதும் பெண்களை இழிவாகப் பேசினார்கள் என்பதும் எளிதில் ஏற்கக்கூடியவை தானா என்கிற கேள்வி எழுகிறது. இதனை நேர்மையானவர்களால் மட்டுமே உணர முடியும்.

பாமகவின் தலித்துகளுக்கு எதிரான அனைத்து வன்முறை வெறியாட்டங்களுக்கும் பெண்கள் பிரச்சினையையே முன்னிறுத்துவதும் இல்லாதது பொல்லாததையெல்லாம் இட்டுகட்டி அவதூறு பரப்புவதும் அவர்களின் நீண்டகால வாடிக்கையாக உள்ளது. எதைச் சொன்னால் எல்லோரும் எளிதில் உணர்ச்சியடைவார்களோ அதனை உத்தியாகக் கையாளுவது என்கிற அடிப்படையில், எப்போதுமே பெண்களைப் பகடைக்காயாக உருட்டுவது பாமகவினரின் வழக்கமாக உள்ளது.

ஒரு இடத்தில் சாதித் தீயை மூட்டிவிட்டால் அது நொடிப்பொழுதில் நாடு முழுவதும் பரவிவிடும்; அந்த நெருப்பில் குளிர் காயலாம்; அரசியல் ஆதாயம் காணலாம் என்கிற எதிர்பார்ப்பில் இவ்வாறு பாதிக்கப்படும் தலித்துகள் மீதே அபாண்டமாக பழி சுமத்துவது அவர்களின் தொழிலாக உள்ளது. பொன்பரப்பியிலும் இதே உத்தியையே இப்போது கையாண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக திமுக பொறுப்பாளர் தனது வீட்டில் எழுதிய பானை சின்ன விளம்பரத்தைச் சுண்ணாம்பு பூசி அழித்துள்ளனர். திமுக பொறுப்பாளர்களையும் மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

தொகுதியின் பிற பகுதிகளைவிட செந்துறை ஒன்றியத்தில் தான் இத்தகைய பதற்றம் கூடுதலாக நிலவியது. இதற்கு இந்து முன்னணியினர் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், செந்துறை ஒன்றியத்தில் மட்டுமே இந்து முன்னணி என்கிற மதவெறி அமைப்பு உள்ளது. இந்த அமைப்புக்கும் பொன்பரப்பி தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் பெரிய அளவிலான பங்களிப்பு உள்ளதை அறிய முடிகிறது.

ஏற்கெனவே அதே பகுதியில் நடந்த சிறுகடம்பூர் நந்தினி என்னும் தலித் சிறுமியின் படுகொலையில் இந்து முன்னணியினரின் பங்கு பற்றி பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது என்பது தற்போது சுட்டிக்காட்டத்தக்கது ஆகும். இவ்வமைப்பினரின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பாக பாமக மாறியுள்ளதைக் காண முடிகிறது.

மஞ்சள் பனியன் அணிந்திருந்ததால் வன்னியர் என்றெண்ணியே தலித் இளைஞர்கள் ஒரு ஊடகவியலாளரைத் தாக்கியுள்ளனர் என்று பாமக தரப்பில் ஒரு கருத்து இட்டுக்கட்டிப் பரப்பப்படுகிறது. ஆனால், அந்த ஊடகவியலாளரோ, தன்னை ஒரு தலித் என அடையாளம் தெரிந்தே விசிகவினர் தாக்கிவிட்டனர் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பாமகவின் திரிபு வேலைகளை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயரால் எளியமக்களின் வாக்குரிமையைத் தடுப்பது, அம்மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்துவது போன்ற வெட்கக்கேடான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்வது ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவாகும். இந்திய தேசத்துக்கே நேர்ந்த பெரும் தலைக்குனிவாகும்.

இந்நிலையில், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும், சாதிய மதவாத சக்திகளுக்கு உரிய தண்டனையளிக்க வற்புறுத்தவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், 24.04.2019 புதன் கிழமையன்று சென்னையிலும் 25.04.2019 வியாழக்கிழமையன்று அரியலூரிலும் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

குறுகிய கால இடைவெளி என்பதால் இவ்விரு இடங்களில் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவற்றில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்று எளிய மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close