[X] Close

வாகனங்களில் கொடிகள், தலைவர் படங்களுக்கு தடை விதித்தால் 50 சதவீதம் குற்றங்கள் குறையும்: உயர் நீதிமன்றம் கருத்து


50

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 10:12 am
  • அ+ அ-

வாகனங்களில் கட்சிக்கொடி, தலைவர்களின் படத்துடன் வலம் வருவது பொதுமக்களையும், போலீஸாரையும் மிரட்டுவதாகும். இவற்றுக்கு தடை விதித்தாலேயே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழி, ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன. நெடுஞ்சாலைகளை அமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மட்டுமே அரசின் பணியாக உள்ளது. பின்னர் சாலைகளைப் பராமரிக்கும் பணி தனியாருக்கு ஒப்படைக்கப்படுகிறது. விதிப்படி முக்கியச் சாலை இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு, வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். சாலைகளின் நடுவில் அரளிச் செடிகள் நட வேண்டும். இப்பணிகள் முறையாக நடப்பதில்லை.

இதனால் நெடுஞ்சாலைகளில் தற்போது விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட எல்இடி பல்புகள், ஒன்றிரண்டு பல்புகளையும் பொருத்தியுள்ளனர். இந்த விளக்கொளியால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. விதியை மீறி அதிக ஒளி வீசும் பல்புகளை பொருத்தி வாகனங்கள் ஓட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

விபத்தில் 2-ம் இடம்

இந்தியாவில் சாலை விபத்தில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. இதனால் சாலை விபத்துகளைக் குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார். விசாரணையின்போது நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? வாகனங்களில் சீன பல்புகள், எல்இடி பல்புகள், அதிக எண்ணிக்கையில் பல்புகளை பொருத்தி வாகனம் ஓட்டுவதை மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறதா? அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டி, தலைவர்களின் படங்களை அச்சிட்டும், தங்கள் வகிக்கும் பதவிகளை எழுதியும் வாகனங்களை இயக்குவதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள்ளதா? இதுபோன்ற செயல்கள் போலீஸாரையும், பொதுமக்களையும் மிரட்டுவது போல்உள்ளது. இந்தச் செயல்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? இவற்றுக்கு தடை விதித்தாலே 50 சதவீத குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த மனு தொடர்பாக உள்துறைச் செயலர், போக்குவரத்து முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 23-ம் தேதிக்கு(இன்று) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close