[X] Close

மதுரையில் வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் அனுமதி பெறாமல் நுழைந்த மேலும் மூவர் சஸ்பெண்ட்: உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:51 am
  • அ+ அ-

-கி.மகாராஜன்

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் அனுமதி பெறாமல் நுழைந்து ஆவணங்களை நகல் எடுத்த விவகாரத்தில் பெண் வட்டாட்சியரை தொடர்ந்து மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மதுரை மேற்கு பேரவைத் தொகுதியின் உதவித் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியாகவும், வாக்குப்பதிவு ஆவணங்கள் பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டு சாவிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலில் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்ட அறை மட்டும் சீல் வைக்கப்படவில்லை. இந்த தொகுதியின் உதவித் தேர்தல் அலுவலர் குருசந்திரன், மேற்குத் தொகுதி வாக்குப்பதிவு ஆவணங்களை ஒரு நகல் எடுத்து ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு வட்டாட்சியர் சம்பூரணத்துக்கு உத்தரவிட்டு விட்டு தனது சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து சம்பூரணம் அந்த ஆவணங்களை நகல் எடுக்க 3 ஊழியர்களுடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பிரதான வாயில் வழியாக செல்லாமல் மாற்று வழியில் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை ஊழியர்கள் வெளியே எடுத்துச் சென்று நகல் எடுத்து வந்துள்ளனர்.

நகல் எடுத்து முடிந்து வெளியே வரும்போது சம்பூரணத்தை அங்கிருந்த பெண் எஸ்.ஐ. ஒருவர் பார்த்து விசாரித்துள்ளார். அப்போது உயர் அதிகாரி சொல்லியே ஆவணங்களின் நகல் எடுக்க வந்ததாகக் கூறி, அந்த அதிகாரிக்கு போன் போட்டு அந்த எஸ்.ஐ.யிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகே சம்பூரணத்தை வெளியே செல்ல போலீஸார் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் சம்பூரணத்தை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்தது. அவருடன் சென்ற மாநகராட்சி ஊழியர்களான சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

அலுவலருக்கு நோட்டீஸ்

இதனிடையே, சம்பூரணம் உள்ளிட்ட 4 பேரிடம் மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.நடராஜன் விசாரணை நடத்தினார். அப்போது மதுரை மேற்கு பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான குருசந்திரன் சொன்னதன் பேரிலேயே வாக்குப் பதிவு ஆவண அறைக்குச் சென்றதாக 4 பேரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஆவணங்களை நகல் எடுக்க வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேரையும் வாக்குப்பதிவு ஆவண அறைக்கு அனுப்பியது ஏன்? எதற்காக ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டன? என்னென்ன ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டன? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குருசந்திரனை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் பாலாஜி நேற்று விசாரணை நடத்தினார்.

கட்சியினர் மீது நடவடிக்கை

வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் நுழைந்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக, மார்க்சிஸ்ட், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சார்பில் மருத்துவக் கல்லூரி மைதானம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மதுரை ஆர்டிஓ முருகானந்தம் மற்றும் 3 ஊழியர்களை கட்சியினர் தாக்கினர்.

இதனால் ஆர்டிஓ மற்றும் அரசு ஊழியர்களை தாக்கிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து வருவாய்த் துறை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக வருவாய்த் துறை ஊழியர்கள் கூறும்போது, “உயர் அதிகாரி கேட்டுக் கொண்டதால் வட்டாட்சியர் ஆவணங்களை நகல் எடுத்துள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதனால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பணி செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளபோது, அதிகாரிகளை தாக்கிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close