[X] Close

தி.நகரில் 2 கார்களில் தீ பிடித்ததால் பரபரப்பு: தேனாம்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை


2

  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:29 am
  • அ+ அ-

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் 2 கார்கள் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் பழுதான ஒரு காரை, சாலை ஓரத்தில் அதன் உரிமையாளர் நிறுத்தியிருந்தார். காரை பழுது பார்ப்பதற்காக 2 மெக்கானிக்குகள் நேற்று காலையில் வந்தனர். காரின் முன்பகுதியை திறந்து சரி செய்து கொண்டிருந்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயை அணைக்க மெக்கானிக்குகள் முயன்றும் பயன் ஏற்படவில்லை. காரின் எரிபொருள் டியூப்பிலும் தீ பிடித்ததால் தீயை அணைக்க முடியவில்லை. காரில் பெரிய அளவில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. அப்போது அருகே இருந்த மற்றொரு காரிலும் தீ பரவ ஆரம்பித்தது. அந்த காரும் சேர்ந்து தீயில் எரிய ஜி.என்.செட்டி சாலையில் கடும் கரும்புகை சூழ்ந்தது.

அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் இரு கார்களும் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன. இச்சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்களில் தீ பிடிப்பதை தடுப்பது எப்படி?

கார் பொறியாளர் ராஜூ கூறும்போது, “காரின் முன் பகுதியில் இன்ஜினுடன் சேர்ந்து ஏராளமான மின் வயர்கள் இருக்கும். இந்த வயர்கள் சேதம் அடைந்து தீப்பிடிக்கும். இவை பிரேக் மற்றும் பவர் ஸ்டியரிங் ஆயில் டியூப்களில் சேதம் ஏற்பட்டாலும், அதில் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும்.

காரின் முன் பகுதியில் மின் விளக்குகள், பேட்டரி, ஏசி மிஷின் என எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள கருவிகள் அதிகம் உள்ளன. வெயில் காலங்களில் மின் வயர்கள் மற்றும் ஏசி இயந்திரம் மூலம் தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏசி இயந்திரத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

ஆயில் டியூப்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, காரை நிறுத்தியிருக்கும் இடத்தில் ஆயில் கிடக்கிறதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதைப் பராமரிப்பது குறித்த அடிப்படை அறிவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். தீயை அணைக்கும் சிறிய அளவிலான ஸ்ப்ரே பாட்டிலின் விலை ரூ.150 தான். அதை கார்களில் வாங்கி வைத்துக் கொண்டால், சிறிய அளவிலான தீப்பிடிக்கும்போதே அதைத் தடுத்துவிடலாம்” என்றார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close