விஜய்யின் நீட் எதிர்ப்புக் குரல் முதல் கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


நீட்’ தேர்வுக்கு எதிரான விஜய் குரல்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா புதன்கிழமை நடந்தது. இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தத் தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து.

நீட் தேர்வில் நான் மூன்று முக்கியப் பிரச்சினைகளைக் காண்கிறேன். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.

மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும்? அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்துப் பாருங்கள்.

மூன்றாவதாக, நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்று விஜய் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு: “நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ.தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்,” என்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அவர் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், “ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல” என்று ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்: தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று பேசியதன் மூலம், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்திவிட்டார் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், “நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

“அரசியலமைப்பே எங்களின் உத்வேகம்..” - பிரதமர் மோடி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதலுரையுடன் மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் மோடி, “அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அரசியலமைப்பைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டும். அரசியலமைப்பு எங்களின் உத்வேகமாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் முயன்று வருகிறோம்” என்றார்.

உ.பி நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணை: யோகி: ஹாத்ரஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், "மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை. மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

காவல் துறை கூடுதல் தலைவர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளோம். அது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஆழமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளது. நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெறும். நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த நீதி விசாரணைக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார். முன்னதாக, ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய வழக்கில், அண்மையில் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில்: “இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல் தொடர்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு சு.வெங்கடேசன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா: கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்தகுமார் புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஆணையரிடம் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றதிலிருந்தே அவரது செயல்பாடுகள் மீது திமுகவினர் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வந்தனர். ஒப்பந்த விவகாரங்களில் தலையிடுவது, ஒப்பந்ததாரர்களுடன் பேசுவது, திட்டப்பணிகளில் தலையிடுவது என அவரது நிர்வாகத்தில் கணவர் ஆனந்தகுமாரின் தலையீடு அதிகமிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, மேயர் கல்பனாவுக்கு சொந்தமான வாக்குச்சாவடியில், திமுக வேட்பாளரை விட, பாஜக வேட்பாளர் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்ததும் கவனிக்கப்படுகிறது.எனினும், “எனக்கு உடல்நிலை சரியில்லாதால் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். வேறு எந்த அழுத்தங்களும் இல்லை. மக்களவைத் தேர்தல் பணியில் நான் சிறப்பாக பணியாற்றினேன். அதற்கான புகைப்படங்கள் உள்ளன” கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் எதிரொலியாக மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்துள்ளார். விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதுவரை துணை மேயர் கே.ஆர். ராஜு பொறுப்பு மேயராக செயல்படுவார் என்றும் தெரிகிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்: அசாம் மாநில வெள்ளத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். 28 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 லட்சம் கால்நடைகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரேநாளில் 74 சாலைகள், 6 பாலங்கள் மற்றும் 14 அணைக்கரைகள் சேதமடைந்தன.

கோடநாடு வழக்கு - சசிகலா கருத்து: “கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சசிகலா தெரிவித்துள்ளார்.