[X] Close

4 அடுக்கு பாதுகாப்பையும் மீறி வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம்: மதுரை ஆட்சியர், வட்டாட்சியரிடம் கூடுதல் தேர்தல் அதிகாரி நேரில் விசாரணை


4

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 14:12 pm
  • அ+ அ-

4 அடுக்கு பாதுகாப்பை மீறி வட்டாட்சியர் சம்பூரணம் நுழைந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்புக்காரணமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

மதுரை மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மேற்குத் தொகுதி வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் அனுமதியின்றி நுழைந்து ஆவணங்களை நகல் எடுத்ததாகத் தகவல் பரவியது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை வேட்பாளர் பசும்பொன்பாண்டியன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மதுரை மருத்துவக் கல்லூரி முன் நேற்று முன்தினம் இரவு திரண்டனர்.

அத்துமீறி நுழைந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட வேண்டும், அந்த அதிகாரியை அனுப்பியது யார், அவர் சுமார் 2 மணி நேரம் என்ன செய்தார் என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில்பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வேட்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன. அதில் வட்டாட்சியர் சம்பூரணம், வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் செல்வது, வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜனிடம் வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வட்டாட்சியர் சம்பூரணம் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஆட்சியர் அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் சம்பூரணத்தை தேர்தல் ஆணையம் நேற்று காலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் நடந்த தொடர் விசாரணையில் அவருடன் சென்ற, ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன் உள்ளிட்ட 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, தற்போது, சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தவிவகாரம் பெரிதாக வெடித்து கிளம்பவே கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன், வட்டாட்சியர் சம்பூர்ணம், மதுரை மேற்கு தொகுதி தேர்தல் அலுவலர் குருசங்கர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

விசாரணைக்குப்பின் அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close