[X] Close

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பெண் அதிகாரி சென்ற விவகாரம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சிகள் புகார்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:55 am
  • அ+ அ-

திமுக கூட்டணி கட்சிகள் அளித்த புகார் மனுவைத் தொடர்ந்து, மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த வட்டாட்சியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தேர்தல் ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கீழ் பணிபுரியும் வட்டாட்சியர் சம்பூரணம் நேற்று முன்தினம் நுழைந்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், எம்பி டி.கே.ரங்கராஜன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கே.பாலகிருஷ்ணன்: மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பட்டுள்ள பகுதியில், 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, வட்டாட்சியர் சம்பூரணம், சம்பந்தப்பட்ட அறைக்குச் சென்று 3 மணி நேரம் இருந்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் முழுவதுமாக துணை ராணுவப் படையினரை நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்திருக்கிறோம்.

ஆர்.எஸ்.பாரதி: நாங்கள் குற்றம்சாட்டுவதே மாவட்ட ஆட்சியர் மீதுதான். அவரை வைத்தே விசாரணை நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே முறையான விசாரணையை நடத்த வேண்டும். அங்கு 40 சதவீதம்தான் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. மீதம் உள்ள வாக்குகளை அழிக்க வாய்ப்புள்ளது. அதற்காகத்தான், வட்டாட்சியர் உள்ளே நுழைந்திருக்க வேண்டும்.

திருமாவளவன்: மதுரை மட்டுமல்லாது, இதர மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்கள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து, அறிவிக்க வேண்டும்.

இரா.முத்தரசன்: தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் மதுரை, தருமபுரியில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் கண்காணிப்பில் உள்ளது. சிசிடிவி மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனுள் யாரும் செல்ல முடியாது. செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அருகில் உள்ள தேர்தல் ஆவணங்கள் வைப்பறைக்குத்தான் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றுள்ளார். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பான விவரங்கள் விரைவில் கிடைக்கும். வட்டாட்சியர் சம்பூர்ணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் பணி இடை நீக்கம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆட்சியரிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close