[X] Close

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 300 பேர் விருப்ப மனு - முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர்


4-300

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:38 am
  • அ+ அ-

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். அவர்களிடம் முதல்வர், துணை முதல்வர் நேர்காணல் நடத்தினர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துவிட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றுகாலை 10 மணிக்குத் தொடங்கியது. மேற்கண்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ.25 ஆயிரம் செலுத்திவிருப்ப மனுவைப் பெற்றனர். திருப்பரங்கும் அதிமுக எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ் மரணமடைந்ததையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து போஸின் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் அவரது 2 மகன்கள் ஆகியோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். மாலை 4 மணி நிலவரப்படி 300-க்கும் மேற்பட்டோர் விரும்ப மனு பெற்றனர்.

மனுவை பூர்த்தி செய்து மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்றுஅதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மாலை 6.30 மணியளவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். மேற்கண்ட 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரமும், இத்தொகுதிகளில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பிரசார விவரமும் இன்று வெளியாகும் என்று தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close