[X] Close

நீதிபதிகளுக்கே தற்போது பாதுகாப்பு இல்லை: சென்னை முத்தமிழ்ச் சங்க ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:06 am
  • அ+ அ-

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் தற்போது நிலவுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

அமுதசுரபி அறக்கட்டளை சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கத்தின் ஐம்பெருவிழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு, 100 கவிஞர் களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் வைரமுத்து பேசிய தாவது:கவிஞர்களையும், கவிதைகளையும் இந்த தேசம் இடதுகையால்தான் ஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்களின் இரைச் சலில், இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம் தன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை.

யார் கேட்கிறார்களோ, இல்லையோ, அன்பின் வழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.

இலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றம் தவிர வேறு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.

முன்பெல்லாம் ஒரு ஆளுமையை சிறுமைப்படுத்த வேண்டும் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சா, மதுவை வைத்து கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள்.

நீதிபதியின் மூளையை முடக்குவதும், அவரது நேரத்தை திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலை தொலைப்பதும்தான் இந்த சதியின் நோக்கம். ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்றார் மகாகவி பாரதி. ‘தீயில் ஈ ஒட்டாது’ என்றார் சுரதா. ‘தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்துபோகாது’ என்றேன் நான்.

ஓட்டுக்கு கையூட்டு உப்புமாவும் காபியும் என்று இருந்த நிலை மாறி ரூ.200 முதல் ரூ.4,000 வரை ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சார வீழ்ச்சிக்கு காரணம் வாக்காளரா, வேட்பாளரா? நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சி அல்லதுஎதிர்க்கட்சியைத் தோற்கடிக் கிறான். பணம் பெற்று வாக்களிக் கும் வாக்காளன் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்கிறான்.

ஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டு தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோசம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினர். ஏராளமான கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close