[X] Close

தமிழகத்தில் இதுவரை ரூ.934 கோடி தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


934

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 10:42 am
  • அ+ அ-

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,403 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் என ரூ.934 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் கடந்த மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. தேர்தலின்போது அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதன் பிறகு, செலவினப் பார்வையாளர்கள் வந்து ஆய்வு செய்து, தேவைக்கேற்ப குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். இதுதவிர, வருமானவரித் துறை சார்பிலும் தொகுதிக்கு ஒரு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23-ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், கண்காணிப்பு தொடர்கிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 10 முதல் ஏப்ரல் 19 வரை நடந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை காவல் துறையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.141.22 கோடி, வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.71.96 கோடி என ரூ.213.18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.62 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.703.44 கோடி மதிப்பிலான 2,403 கிலோ தங்கம், ரூ.2.65 கோடி மதிப்பிலான 645 கிலோ வெள்ளி, ரூ.28.50 லட்சம் மதிப்புள்ள வைரம், ரூ.2.30 கோடிக்கு இதர பொருட்கள் என ரூ.708.68 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, ரூ.3.51 கோடி மதிப்பிலான 2.18 லட்சம் லிட்டர் மதுபானம், ரூ.37.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.8.17 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.933 கோடியே 94 லட்சம்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக, பொது, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியதாக திமுக மீது 1,421, அதிமுக மீது 1,149, இதர கட்சிகள் மீது 1,162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டம் 171-வது பிரிவின் கீழ் அதிமுக மீது 194, திமுக மீது 155, இதர கட்சிகள் மீது 216 வழக்குகள் பதிவாகியுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி திமுக மீது 118, அதிமுக மீது 107, இதர கட்சிகள் மீது 168 வழக்குகள் பதிவாகியுள்ளன.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16,925 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் கீழ் 11,787 பேரிடம் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி-விஜில் செல்போன் செயலி வாயிலாக 2,823 புகார்கள் வந்தன. இவற்றில் சரியானதாக கருதப்பட்ட 1,264 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 43 புகார்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. மற்றவை கைவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close