தஞ்சாவூரில் மறியல்: தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் குழுவினர் 100 பேர் கைது


தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியாளர் அலுவலக சாலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் எழிலரசன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் இரா கண்ணதாசன், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக் குழு மதியழகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராகவன்துரை, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்ட ஆசிரியர்கள் அந்தச் சாலையிலேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரிய - ஆசிரியைகளை போலீஸார் கைது செய்தனர்.