[X] Close

மகன் இறந்த நிலையிலும் ஜனநாயக கடமை: சமூக ஆர்வலரை பாராட்டும் கிராம மக்கள்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:48 am
  • அ+ அ-

பட்டுக்கோட்டை அருகே மகன் மாரடைப்பால் இறந்த நிலையிலும், தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார் சமூக ஆர்வலர் வீரசேனன்(68).

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேனன். இவரது மகன் ராஜ்குமார்(46). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர்.

சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வமுடன் செயல்படும் ராஜ்குமார், வாக்குக்கு யாரும் பணம் வாங்க வேண்டாம், அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் என அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

இவரது தந்தை சமூக ஆர்வலர் வீரசேனன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வார். அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல் குறித்து தெரிவிப்பார். விவசாய போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக கலந்துகொள்வார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு நிவாரண உதவி கிடைக்க உதவினார். வீரசேனனும், அவரது மனைவியும் உடல் தானம் செய்ய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எழுதிக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டதில் ராஜ்குமார் திடீரென இறந்துவிட்டார். தேர்தல் பணிக்காக பொன்னவராயன்கோட்டைக்கு வந்திருந்த அலுவலர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொண்டிருந்த வீரசேனனுக்கு இத்தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

உடனே வீட்டுக்குச் சென்ற வீரசேனன், மகன் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து கதறி அழுதார். மகன் சடலமாகக் கிடத்தப்பட்டிருந்த நிலையிலும் வீரசேனன் வாக்குச்சாவடிக்குச் சென்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். இதை அவ்வூர் மக்கள் பலரும் பாராட்டினர். அவ்வூரில் வாக்களிக்கச் சென்ற பலரும் ராஜ்குமார் இறந்த தகவலறிந்து உடனே வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பின்னர் வாக்களிக்கச் சென்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close