[X] Close

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே பெரும் சவாலாக இருந்தது: மனம் திறக்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 08:52 am
  • அ+ அ-

-ச.கார்த்திகேயன்

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதே பெரும் சவாலாக இருந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 10-ம்தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 18-ம் தேதி வரை 40 நாட்கள் ஓய்வு, உறக்கமின்றி உழைத்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில், பணிகளுக்கு இடையே நேற்று பிற்பகல் சற்று ஓய்வில் இருந்தார். மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த களிப்பு அவரது முகத்தில் தெரிந்தது. அந்தக் களிப்புடனே ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிஇடைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி இருப்பது பற்றி...?

இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக் கள் அமைக்கப்பட்டு இரவு பகலாக,ஓய்வின்றி பணிகள் நடைபெற்றன. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவைத் தேர்தலில் 72சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்காக, கடுமையாக உழைத்த பணியாளர்களுக்கும், வெயிலையும் பொருட்படுத்தாது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு, வாக்குப்பதிவு தாமதமானது ஏன்?

இயந்திரங்களைப் பெருமளவில் பயன்படுத்தும்போது, சுமார் 200 அல்லது 300 இயந் திரங்களில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, இயந்திரங்களை லாரிகளில் கொண்டு செல்லும்போதும் இறக்கும்போதும் கடினமாகக் கையாளுவதால் ஒயர்கள் துண்டிக்கப்படுவது மற்றும் இயந்திரத்தில் உள்ள மின்னணு பொருட்கள் பழுதாவது தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக மிகக் குறைந்த இடங்களில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. பின்னர் மாற்று இயந்திரங்களைக் கொண்டு உடனடியாக சரி செய்யப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதே?

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் போதிய அவகாசம் வழங்கப்பட்டு, 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களில் ஊரகப் பகுதியில் வசிப்போர், வாக்காளர் பட்டியலை பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். நகர்ப்புறங்களில் வசிப்போர் வாக்காளர் பட்டியலை பார்வையிட ஆர்வம் காட்டவில்லை. அதற்கு அவர்களின் வேலைப் பளுவும் காரணமாக இருக்கலாம்.

அவர்கள் சிறப்பு முகாமுக்குப் போக முடியாவிட்டாலும்கூட, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள voter helpline என்ற கைபேசி செயலி, https://www.nvsp.in என்ற இணையதளம் உருவாக்கி இருந்தோம். வாக்காளர்கள் ஒவ்வொருவரும், தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

விவிபாட் இயந்திரத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததா?

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் இயந்திரங் களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராமப்புறங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை அதிகப்படுத்தினோம். இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் விவிபாட் இயந்திரம் பயன்படுத்திய நிலையில், யாருக்கு வாக்களித்தோம் என்பதைவாக்காளர்கள் பார்க்க முடிந்தது, அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் உங்களுக்கு சவாலாக இருந்தது எது?

பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் போன்ற மோசமான சம்பவங்கள் நடப்பதில்லை. ஆனால் பணபலம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்களும்ஓட்டுக்குப் பணம் வாங்க விரும்புகின்றனர். அரசியல் கட்சிகளும் ஓட்டுக்குப் பணம் தரத் தயாராக உள்ளன. அதைத் தடுப்பதுதான் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய சவாலாக இருந்தது. பண விநியோகத்தைத் தடுக்க இந்த முறை, வருமானவரித் துறையுடன் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கிறோம்.

கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் இந்த முறை குறைந்திருப்பது ஏன்?

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள் எழுதுதல் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுவரில் இடம் பிடிப்பதில் மோதல், பேனர்களில் உள்ள தலைவர்களின் படங்களை சேதப்படுத்துவதால் ஏற்படும் மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சுமார் 28 சதவீத வாக்குகள் பதிவாகவில்லையே?

வளர்ந்த நாடான அமெரிக் காவில்கூட கடந்த 4 தேர்தல்களில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்த லில் சுமார் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பது மிகப்பெரிய சாதனைதான்.

வாக்களிக்க வராதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் திட்டம் உள்ளதா?

சாதாரண மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் சொகுசு வாழ்க்கையில் உள்ளவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் வசதியைக்கொடுக்குமாறு கேட்கின்றனர். தபால் ஓட்டே, கட்சிக்காரர்களிடம் கொடுத்து தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆன்லைன் முறை வந்துவிட்டால், வாக்காளர்கள் மிரட்டப்பட்டு வாக்களிக்கும் நிலைஏற்படலாம். அதனால் வாக்குச்சாவ டிக்கு வந்து வாக்களிப்பதன் மூலம்தான் வெளிப்படையான தேர்தலைஉறுதி செய்ய முடியும். இந்தத் தேர்தலில் தங்களுக்கு மனநிறைவை அளித்த பணி எது?இந்த தேர்தலில் வாக்களிக்க, மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். அதற்காக மாநிலம் முழுவதும் இருந்த 4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் கண்டு,மாற்றுத்திறனாளிகள் நலன்காக்கும்அமைப்புகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கான தேவைகளைக் கேட்டறிந்து, அவர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி களில் வசதிகள் செய்ய எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கிறது.

இவ்வாறு சத்யபிரத சாஹு கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close