சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநராக மருத்துவர் ஆர்.மணி நியமனம்


சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக மருத்துவர் ஆர்.மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாகவும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (டிஎம்இ) இயக்குநராகவும் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ஆர்.விமலா, பணியில் சிறந்து விளங்கியதுடன், நேர்மையாக செயல்பட்டவர் என்ற காரணத்தால், ஒப்பந்த அடிப்படையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் ஆர்.விமலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த ஆர்.மணி, அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளராக ஆர்.மணி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கூறுகையில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் உள்ளிட்ட சில பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

அதன் பயனாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆர்.மணி, அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது எங்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும்” என்றார்.