[X] Close

ஆற்காடு அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைய முயற்சி: பாமகவினரை எச்சரித்து துப்பாக்கிச் சூடு - தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:00 am
  • அ+ அ-

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் பாமகவினர் கூட்டமாக நுழைய முயன்றனர். இதனால், பாமகவினரை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவப்படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் நேற்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. அந்த மையம் பதற்றமான வாக்குச்சாவடி என்பதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5.45 மணி அளவில் பாமகவைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, ஆற்காடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எல்.இளவழகன் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளனர். அங்கிருந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி என்பவர், தேர்தல் விதிப்படி கூட்டமாக வாக்குச்சாவடிக்குள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனக் கூறி அவர்களை தடுத்துள்ளார். ஆனால், அதையும் மீறி அவர்கள் உள்ளே செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படை வீரர் நவ்ரஜ்சிங் என்பவர் பாமகவினரை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி தனது துப்பாக்கியால் ஒரு முறை சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த பாமகவினர் சிதறி ஓடினர். வாக்குச்சாவடிக்குள் இருந்த அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தனர். பதற்றமான சூழலில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த தகவலை அடுத்து வேலூர் சரக டிஐஜி வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் அதிரடிப்படை காவல் துறையினர் கீழ்விஷாரம் பகுதிக்கு சென்றனர். கூடுதல் காவல் துறையினர் நிறுத்தப்பட்டு வாக்குச்சாவடிக்குள் யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து துணை ராணுவப்படை வீரர் நவ்ரஜ்சிங்கிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில், அங்கு வந்த பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, முன்னாள் எம்எல்ஏ இளவழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், வாக்குப்பதிவு தடைபட்டதால் கூடுதல் நேரம் அளிக்க வேண்டும் என்று கேட்டனர். இதுதொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ராணிப்பேட்டை வருவாய் சார் ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் நேரம் அளித்து வாக்குப்பதிவுக்கு அனுமதி அளித்தார். இரவு 7.45 மணி வரை வாக்குப்பதிவு நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கஉள்ளனர்.

இதுகுறித்து, பாமக முன்னாள் எம்எல்ஏ இளவழகன் கூறும்போது, ‘‘வாக்குச்சாவடி அமைந்த தெருவின் வழியாகத்தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆனால், அந்த தெருவின் வழியாகச் செல்ல போலீஸ்அனுமதி தரவில்லை. இது குறித்து கேட்கச்சென்றபோது அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது’’ என்றார்.

டிஐஜி வனிதா கூறும்போது, ‘‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப்படை வீரர் சுட்டுள்ளார். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.வாக்காளர்களுக்கு கூடுதல் நேரம் தரப்பட்டு அமைதியாக வாக்களித்தனர்’’ என்றார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close