[X] Close

ரூ.11.48 கோடி பறிமுதல் வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு? - வருமான வரித் துறை விசாரணை


11-48

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:57 am
  • அ+ அ-

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்தின் வீடுகளில் வருமான வரித் துறையினற் கடந்த 30-ம்தேதி மற்றும் ஏப்.1-ல் சோதனை நடத்தினர். மேலும், திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, அவரது உறவினர் தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்தனர்.

சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தில் பெரும் பகுதி புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. வங்கி அதிகாரிகள் உதவியுடன் மட்டுமே புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், புதிய ரூபாய் நோட்டுக் கட்டுகளில் கனரா வங்கி காட்பாடி கிளையின் முத்திரையும் இருந்தது.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணம் தொடர்பாக கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்ததை பூஞ்சோலை சீனிவாசன் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான அறிக்கையின்பேரில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்தானது. இதற்கிடையில், புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் சிக்கியது தொடர்பாக காட்பாடி கனரா வங்கி மேலாளர் தயாநிதி என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். அப்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்கு 3 கட்டங்களாக புத்தம்புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு அருகில் இருக்கும் கனரா வங்கியின் பணப் பரிமாற்றம் செய்யும் மையத்தில் இருந்து (செஸ்ட் மையம்) வழங்கப்பட்டதும் அந்தப் பணத்தை பூஞ்சோலை சீனிவாசனே நேரடியாக வாங்கிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பணம் கைமாறிய சம்பவத்தில் வேறு வங்கி அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close