மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றை மேம்படுத்தவும், அதன் கரைகளில் பூங்கா, சாலை அமைத்து அழகுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி விரயமாகியுள்ள நிலையில், தற்போது திமுக ஆட்சியில் மீண்டும் வைகை ஆற்றை புனரமைக்க மாநகராட்சி விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருவது பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்படும் நகரத்தில் ஒரு பகுதியை தேர்வு செய்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஸ்மார்ட் வாகனப் போக்குவரத்து, உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் இந்த திட்டத்தில் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு ரூ.991 கோடியில் பழைய பெரியார் பஸ்நிலையத்தையும், காம்பளக்ஸ் பஸ்நிலையத்தையும் இடித்துவிட்டு ஹெடெக் மாடலில் புதிய பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில், பெரியார் பேருந்து நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங், தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையம், வைகை ஆற்றில் இரு கரைகளிலும் ஸ்மார்ட் சிட்டி சாலைகள், மீனாட்சிம்மன் கோயிலை சுற்றி புதிய சாலைகள், குன்னத்தூர் சத்திரம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், பெரியார் பேருந்து நிலையம் திட்டமிட்டப்படி அமைக்கப்படாமல் தற்போதும் நெரிசல், மழைநீர் தேங்குவது போன்ற குறைபாடுகளுடன் பழைய பேருந்து நிலையமே பரவாயில்லை என்ற நிலை உள்ளது. பெரியார் பேருந்து நிலையம் மல்டிலெவல் பார்க்கிங் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. தமுக்கம் மாநாட்டு மையம், பொதுமக்களிடம் வரவேற்பு பெறவில்லை. மீனாட்சியம்மன் கோயில் சாலைகள், வழக்கம்போல் நெரில் நிறைந்ததாகவே உள்ளது.
வைகை ஆற்றின் இரு புறமும் சாலை அமைத்து, அதன் கரைகளில் சிறு சிறு பூங்காக்கள், நடைபாதைகள் அமைத்து அழகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி சாலை நகர் பகுதியில் கடைசி வரை நிறைவு பெறாததால் அந்த சாலையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. வைகை ஆறு ஆகாய தாமரை நிறைந்தும், கருவேலம் மரங்கள் புதர் மண்டியும் கிடக்கிறது.
அதனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கோடிகளை ஒதுக்கியும் வைகை ஆறு பொலிவு பெறவில்லை. மக்கள் ஆற்றுக்குள் இறங்க முடியாத அளவிற்கு 14 அடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் போட்டதுதான் மிச்சம். இந்நிலையில் நகரில் 13.5 கி.மீ., செல்லும் வைகை ஆற்றை மீண்டும் புனரமைக்கக்கவும், அபிவிருத்திப்ணிகள் மேற்கொள்ளவும் மாநகராட்சி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது.
அதற்கான ஒப்பதல் கடந்த மாநகராட்சி தீர்மானத்தில் வைக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை தயாரிக்க, ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கணவே ஸ்மார்ட் சிட்டியில் போட்ட நிதியே விரயமாகியுள்ள நிலையில் மீண்டும் மாநகராட்சி வைகை ஆற்றை புனரமைக்க என்ன இருக்கிறது? என்றும், வைகை ஆற்றை அதன் இயல்பு நிலையிலே சுகாதாரமாக பராமரித்தாலே போதும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வைகை ஆற்றுக்கு வரும் கால்வாய்களில் கழிவு நீர்தான் வருகிறது. அந்த நீரை சுத்திகரித்து ஆற்றுக்குள் விடுவதற்கு இந்த திட்டத்தில் கூடுதலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. வைகை ஆறு கரைகளில் உள்ள காலியிடங்களில் சிறு சிறு பூங்காக்கள், சைக்கிளிங் டிராக், தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகள், செடிகொடிகளை அகற்றி பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, ’’ என்றனர்.
ஏற்கனவே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இதுபோன்ற பூங்கா, தெரு விளக்கு, நடைபாதை போன்ற மேம்பாட்டு பணிகள் அமைத்து பராமரிப்பு இல்லாமல் விடப்பட்ட நிலையில் வைகை ஆற்றை புனரமைக்கவும், அழகுப்படுத்தவும் என்ன இருக்கிறது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.