[X] Close

வேப்பேரி வாக்குச்சாவடியில் பரபரப்பு: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் 500-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதி மறுப்பு - மறு வாக்குப்பதிவு நடத்த வாக்காளர்கள் வலியுறுத்தல்


500

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:24 am
  • அ+ அ-

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் பாலர் கல்வி நிலையம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் சுமார் 500 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பதால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று வாக்காளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மறுவாக்குப் பதிவுநடத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் பாலர் கல்வி நிலையம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண்: 88, 89, 90, 91) வள்ளியம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக வாக்களிக்க வந்தனர்.

வரிசையில் சென்றபோது அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று சொல்லி வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த தலைமை வாக்குச்சாவடி அதிகாரியிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர். அவர்களைப் போல பல குடும்பத்தினருக்கும் இந்த நிலை ஏற்பட்டதால், அங்கு அவர்கள் திரண்டனர். அதையடுத்து வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

“கடந்த தேர்தலில் வாக்களித்தோம். இத்தேர்தலில் வேண்டுமென்றே எங்களது பெயர்களை நீக்கியுள்ளனர். எங்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்று நீண்டநேரமாக வாதாடியபடி இருந்தனர். மேலும், மறுவாக்குப் பதிவு நடத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுபோல பலரும் ஆதங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் உருவானது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ராஜேந்திரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களைசமாதானம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் முன்கூட்டியே நீங்கள் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கிறதா என்று சரிபார்த்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் இதுபோல தகராறு செய்வது சரியில்லை” என்று சொல்லி அனைவரையும் வாக்குச்சாவடி வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் வெளியேற்றினர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் அந்த வாக்குச்சாவடியில் காலையில் இருந்து மாலை வரை நீடித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close