[X] Close

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு, விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன: வாக்கு எண்ணிக்கை நாள் வரை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:18 am
  • அ+ அ-

தமிழகத்தில் 38 மக்களவை, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ‘ஸ்டிராங் அறை’யில் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிந்தது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை நடந்தது.

தமிழகம் முழுவதும் 66,699 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அதற்கான பெட்டிகளில் வைக்கப்பட்டன. அதன்பின், முதல் நாள்பெட்டிகளை இறக்கி வைத்தமண்டல குழுவினர் வந்து, வரிசைப்படி, அந்த இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றி, அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொண்டு சென்று வைத்தனர்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் (தென்சென்னை), லயோலா கல்லூரி ( மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வடசென்னை, பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி) உட்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இந்த மின்னணு மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

இந்த மின்னணு இயந்திரங்களை வைப்பதற்காக அந்தவாக்கு எண்ணிக்கை மையங்களில், ‘ஸ்டிராங்’ அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் அமைக்கப்பட்டுள்ள வரிசை அடிப்படையில், மின்னணு இயந்திரங்களை மண்டல குழுக்களில் உள்ள அலுவலர்கள், வைப்பார்கள்.

‘ஸ்டிராங் அறை’

இந்த ‘ஸ்டிராங் அறை’ என்பது ஒரு கதவு மற்றும் ஒருஜன்னல் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் காற்று, வெளிச்சம் புகாத வகையில் இருக்கும். ஒரு வேளை கூடுதல் ஜன்னல், கதவு இருந்தால், அவை செங்கல், சிமென்ட் கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்த அறைகளில் வைக்கப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை அல்லது காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

மேலும், அறையின் வெளியில் இரு கேமராக்கள் கதவை நோக்கி பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமராக்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே, வாக்கு எண்ணிக்கை மைய நிகழ்வுகளைப் பார்வையிடும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு

மேலும், ஸ்டிராங் அறைக்கு 3 முதல் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அரசியல் கட்சிகளின் அனுமதி பெற்ற ஏஜென்ட்களும் பாதுகாப்புக்காக ஷிப்ட் அடிப் படையில் அங்கு வந்து செல்வார்கள். இந்த ஸ்டிராங் அறையில் மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் மே. 23-ம் தேதி வரை பாதுகாக்கப்படும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close