[X] Close

வடசென்னை மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:07 am
  • அ+ அ-

வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராமன் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவு மையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்த பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

அதேபோல், சென்னை பேசின்பாலம் அருகே, மண்டலம் 5, சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம் முன்பு திரண்ட 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர்.

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், கல்யாணபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நின்று கொண்டு அதிமுகவினர் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே பெரம்பூர் பெரியார் நகர் வாக்குச் சாவடியில் உணவு கொடுக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவப் படை காவலர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close