[X] Close

எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்: சென்னை மாவட்டத்தில் சராசரியாக 59 % வாக்குகள் பதிவு


59

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 08:42 am
  • அ+ அ-

சென்னை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 3 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 3மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்து, நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சில வாக்குச்சாவடிகளில் மாலையில் அதிக வாக்காளர்கள் வந்துவிட்ட நிலையில், இரவு 8 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 59 சதவீத வாக்குகள் பதிவாயின.

சுட்டெரிக்கும் வெயில்

சென்னையில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டு, சிறிது நேரம் வாக்குப்பதிவுநிறுத்தப்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் என்று அறிவிக்கப்பட்ட வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள வாக்குச்சாவடிகளில், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சென்னையில் நிலவிய கடும் வெயில் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, நிழலுக்காக பந்தல் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

மாதிரி வாக்குப்பதிவில் தாமதம்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவாக இருந்தால் காலை 6 மணிக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து மக்களவைத் தேர்தலும் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் அதிகாலை 5.30 மணிக்கும் மாதிரி வாக்குப்பதிவை நடத்த வேண்டும்என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு பிறகே மாதிரிவாக்குப்பதிவு தொடங்கியதால், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் குறிப்பிடும்படியான அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இரவு 9 மணி நிலவரப்படி, வட சென்னையில் 61.46, தென் சென்னையில் 58.14, மத்திய சென்னையில் 57.05, பெரம்பூரில் 61.06 சதவீத வாக்குகள் பதிவாயின.

பலத்த பாதுகாப்பு

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வட சென்னை மக்களவைத் தொகுதி வாக்குப் பெட்டிகள் ராணி மேரி கல்லூரிக்கும், தென் சென்னை மக்களவைத் தொகுதி வாக்குப் பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், மத்திய சென்னை தொகுதி வாக்குப் பெட்டிகள் லயோலா கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு பாதுகாப்பான அறையில் பெட்டிகள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close