ஊர்க்காவல் படை எழுத்துத் தேர்வில் வென்ற இளைஞர்கள் கவுரவித்த புதுச்சேரி போலீஸ்


புதுச்சேரி: புதுச்சேரியில் ஊர்க்காவல் படைத் தேர்வில் வென்ற கிராமப்புர இளஞர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து கவுரப்படுத்தினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு வரும் ஜூலை 8ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊர்க்காவல்படைப் பிரிவின் 500 காலிப் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வுகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிந்த நிலையில், காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கவுரவப் பதவியான ஊர்க்காவல் படைப் பிரிவுக்கு தேர்வான ஆண், பெண்கள் உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில் வரும் 8-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 11-ம் தேதி (வியாழக்கிழமை) வரையில், அந்தந்த பிராந்திய காவல்துறை தலைமையிடத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறவுள்ளன. அதற்காக புதிதாக வசிப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சிறப்பு போலீஸாரின் அங்கீகார முத்திரையை வரும் 3-ம் தேதி அல்லது 4-ம் தேதிக்குள் பெற வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை புதுச்சேரி காவல்துறை இணையதளத்தில் அறியலாம்.

சான்றிதழ் சரி பார்ப்புக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனையானது வரும் 9-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையில் நடைபெறும். இது குறித்த விவரங்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 0413-2277900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்நிலையில், புதுச்சேரியின் கிராமப் பகுதியான திருக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்க்காவல்படை தேர்வில் வென்றுள்ளனர்.

தேர்வில் வென்ற இளைஞர்களை அவர்களது குடும்பத்தினருடன் காவல் நிலையம் அழைத்த திருக்கனூர் போலீஸார் வெகுவாக பாராட்டினர். சந்திப்பின் போது, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் எழுத்துத் தேர்வில் தேர்வாகியுள்ள இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.மேலும் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழங்கினார். முன்னதாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

x