குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் 8-வது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் @ கும்பகோணம்


கும்பகோணம்: 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கும்பகோணம் நீதிமன்றம் முன்பு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 8-வது நாளாக இன்றும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டங்களின் பெயர்களை இந்தி, சம்ஸ் கிருதப் பெயர்களாக மாற்றி, தண்டனைகளை பல மடங்கு உயர்த்தி உள்ளதைக் கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் 8-வது நாளாக கும்பகோணம் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ச.விவேகானந்தன் தலைமை வகித்தார்.

செயலாளர் செந்தில் ராஜன், பொருளாளர் ராஜா சீனிவாசன், துணைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர் பாலாஜி, மூத்த வழக்கறிஞர்கள் லோகநாதன், இளங்கோவன், சங்கர், ராஜசேகர் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று, 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கும்பகோணம் வருமானவரித்துறை அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 8-ம் தேதி வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்துள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.