[X] Close

திமுகவினர் மீது மட்டும் சோதனை நடவடிக்கை என புகார்: தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் பாரபட்சம் இல்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:29 am
  • அ+ அ-

தேர்தல் ஆணையம் எந்த நிலையிலும் பாரபட்சமாக செயல்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டதற்கு பின் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, அதிமுகவினர் மீது எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறதே?

இதுவரை 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். 1950 எண், சிவிஜில், கைபேசி வாயிலாக வரும் புகார்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், அரசியல் கட்சிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விளக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரி, செலவினப் பார்வையாளர் உள்ளிட்டோரின் அறிக்கைகள் அடிப்படையிலேயே வேலூரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர் சபேசன் வீட்டில் ரூ.16 கோடி, பிஎஸ்கே நிறுவனத்திடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஒவ்வொரு நிகழ்விலும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபேசன் தொடர்பான விஷயத்தில் எந்த விசாரணையும், வழக்கும் இல்லையே?

வருமானவரித் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கைகள் எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.

மதுரை மக்களவைத் தொகுதியில் 8 மணிவரை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அந்தத் தொகுதியில் கூடுதல் நேரத்துக்கு டோக்கன் வழங்கப்படுமா?

வழக்கமாக 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். ஆனால், மதுரையைப் பொறுத்தவரை 8 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடக்கும். அதற்கு மேலும் வரிசையில் வாக்காளர்கள் நின்றால் டோக்கன் வழங்கப்படும்.

144 தடை உத்தரவு எங்காவது போடப்பட்டுள்ளதா? அதற்கான நடைமுறைகள் என்ன?

பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள், தகவல்கள் பெற்று தேவைப்படும் இடத்தில் 144 தடை உத்தரவு போடப்படும்.

ஆண்டிப்பட்டியில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

நேற்று இரவு பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை வருமானவரித் துறை அளித்துள்ளது. விரிவான அறிக்கை இன்னும் வரவில்லை. வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக எந்த புகார் வந்தாலும் உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அளிக்கப்படும்.

திமுகவினர் மீது மட்டும் திட்டமிட்டு சோதனை நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன்?

தகவல் வந்த இடங்களில் சோதனை நடத்துகின்றனர். ஒருநாள் முன்புகூட எம்எல்ஏ விடுதியில் சோதனை நடந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்து கொள்கிறது. எம்எல்ஏ விடுதியில் பணம் கிடைக்காவிட்டாலும், அறிக்கைக்காக தற்போது காத்திருக்கிறோம்.

வாக்காளருக்கு முதல்வர் பணம் கொடுத்ததாக வந்த வீடியோ மீதான நடவடிக்கை?

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளார். அந்த வீடியோவில் பாதியளவுதான் வெளியாகியிருந்தது. அதில், தான் வாங்கிய பொருளுக்கான பணத்தைத்தான் முதல்வர் அளிக்கிறார். இதுதொடர்பான விரிவான வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் நிலை இருந்தது. தமிழகத்தில் இதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் நிலை மிகவும் குறைவுதான். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இருப்பினும் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளோம்.

மின்துண்டிப்புடன் நடக்கும் இறுதிநேர பணப்பட்டுவாடாவை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இதுதொடர்பாக வந்த புகார்கள் அடிப்படையில் மின்வாரியத்திடம் தகவல் கேட்டு பெற்றோம். தஞ்சை மாவட்டத்தில் நடந்த விபத்து நிகழ்வைத் தவிர வேறு குறிப்பிடும்படியாக மின்தடை இல்லை என்று தெரிவித்துள்ளனர். அப்படி மின்தடை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். பணப்பட்டுவாடாவைத் தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தொடர்ந்து பணியில் உள்ளனர். சிவிஜில் செயலி் மூலம் வரும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close