[X] Close

அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்! - வாக்களிப்பதில் நமக்குள்ள உரிமைகளை தெரிந்து கொள்வோம்!


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 10:24 am
  • அ+ அ-

இந்து தமிழ் வாசகர்களே! வாக்காளர்களே! இன்று நமக்கான உரிமையை பதிவு செய்யும் நாள். அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.

தமிழகத்தில் இன்று 38 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி, அனைத்து மகளிர் வாக்குச்சாவடி என பல்வேறு வசதிகளை செய்துள்ளது. சாய்தளம், குடிநீர், கழிப்பிட வசதி, நிழலுக்கு ஷாமியானா வசதி என மக்கள் வாக்களிப்பதற்கான பெரும்பான்மை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலை பொறுத்தவரை, வாக்காளர் புகைப்படம், விவரங்களுடன் கூடிய வாக்குச்சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சீட்டை கொண்டு நாம் வாக்களிக்க முடியாது. ஆனால், இதில் உள்ள தகவல்களை பயன்படுத்தி, வாக்குச்சாவடி அமைவிடத்தையும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அதே நேரம், வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர் அட்டை பெறாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பான் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அரசு அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வீல் சேர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செல்போனுக்கு தடை

அதேநேரம், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் வாகனம் நிறுத்தவும் அனுமதியில்லை. அந்த பகுதிக்கு பின்னரே வாகனத்தை நிறுத்த அனுமதியுண்டு. இந்த தேர்தலை அமைதியாக, வெளிப்படையாக, நியாயமான முறையில் நடத்த உறுதி பூண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளரின் வாக்கு உரிமையை காக்க பல்வேறு வசதிகளையும் தந்துள்ளது.

TENDER VOTE

தேர்தலை பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், உரிய அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம். ஆனால், சில நேரங்களில் உருவ ஒற்றுமையை பயன்படுத்தியோ அல்லது கள்ள ஓட்டு போடும் நோக்கத்திலோ ஒருவரது வாக்கை, மற்றொருவர் செலுத்திவிட வாய்ப்புள்ளது.

அந்த மாதிரியான நேரத்தில், அந்த வாக்காளருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.அதுவே, டெண்டர் ஓட்டாகும். தனது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் வாக்காளரின், அடையாள சான்றுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர் செய்வார். அவர்தான் உண்மையான வாக்காளரா என்பதை உறுதி செய்து, டெண்டர் ஓட்டுக்கு உரிய வாக்குச்சீட்டு படிவத்தை அளித்து, அவரை வாக்களிக்கச் செய்து, அதற்குரிய உறையில் வைத்து சீலிட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார். வாக்கு எண்ணிக்கையின்போது, தேவைப்படும் பட்சத்தில் அந்த வாக்கு எண்ணப்படும்.

CHALLENGED VOTE

டெண்டர் ஓட்டை போல இந்த சேலஞ்ச்டு ஓட்டும் உள்ளது. ஒரு வேளை ஒரு வாக்காளர் தனது வாக்கை செலுத்த வரும்போது, அங்குள்ள வேட்பாளரின் முகவர், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் இவர் இல்லை என்று தெரிவித்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலர், சம்பந்தப்பட்ட வாக்காளரின் அடையாள ஆவணங்களை கேட்டு பெற்று ஆய்வு செய்வார். இவ்வாறு வேட்பாளரின் முகவர், எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர் ரூ.2-ஐ வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆய்வில், அவர் சரியான வாக்காளர் என்று தெரிந்தால் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

இந்த முறை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், வாக்களித்த சின்னத்தை 7 வினாடிகள் காட்டும் விவிபேட் இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மின்னணு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை விமர்சிக்கப்பட்டு வருவதால், இம்முறை 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்து உறுதிப்படுத்தவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சின்னம் மாறியதா?

ஒரு வேளை ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தை பதிவு செய்த நிலையில், அந்த வாக்கு வேறு சின்னத்துக்கு பதிவானால், உடனடியாக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (presiding officer) தெரிவிக்க வேண்டும். உறுதியாக சின்னம் மாறி வாக்குப்பதிவு ஆனதாக வாக்காளர் தெரிவித்தால், அவருக்கு வாக்குச்சாவடி அலுவலர் மீண்டும் வாக்களிக்க அனுமதி அளிப்பார். வாக்காளர் கூறியபடி சின்னம் மாறி வாக்குப்பதியப்பட்டால் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். ஒரு வேளை வாக்காளர் கூறியது தவறாக இருந்தால், அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார். அவருக்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த வசதிகளையும் வாக்காளர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close