[X] Close

மோடியை வீழ்த்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 09:24 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று காலை நேற்று காலை சென்னை வந்தார். தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே, வெளிப்படையான, நேர்மையான தேர்தல் நடக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவிபாட் இயந்திரம் மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டு வரும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடித்த பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என 23 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ணினால் முடிவுகளை அறிவிக்க 6 நாட்களாகும். எனவே, ஒரு தொகுதிக்கு இரு வாக்குச் சாவடியில் மட்டும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம், 5 வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை 50 சதவீத ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.

கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். ஒரு நபர், ஒரு கட்சி, ஒரு அரசு, ஒரு குரல் என தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் மோடி செய்து வருகிறார். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, ரிசர்வ் வங்கி, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை என அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தையும் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்தி வருகிறார். தேர்தல் நடக்கும் நேரத்தில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தை ஆளும் அதிமுக, மோடிதிமுகவாக மாறிவிட்டது. அதிமுக அரசை டெல்லியில் இருந்து மோடிதான் இயக்கி வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டது. தமிழக விவசாயிகள் டெல்லியில் 100 நாட்கள் போராடியும் அவர்களை மோடி கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக மோடி செயல்பட்டு வருகிறார். எனவே, மோடியை தோற்கடிக்க தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பது உறுதி.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close