இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்


சென்னை: இலங்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் (91) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: தி.க தலைவர் கி.வீரமணி: இலங்கையின் நீண்டகால எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் காலமான செய்தியறிந்து வருந்துகிறோம். அவரது மறைவு இலங்கை தமிழர்களுக்கு மட்டுமின்றி, பிற நாட்டு தமிழர் சமூகத்தினருக்கும் பெரும் இழப்பாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் இரா.சம்பந்தன். இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இலங்கை தமிழர் உரிமைகளுக் காக போராடிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, அதன் தலைவராக செயல்பட்டவர் இரா.சம்பந்தன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஜனநாயகத்துக்காகவும், தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து உழைத்த இரா.சம்பந்தனின் மறைவு, ஜனநாயக சக்தி களுக்கு பேரிழப்பாகும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல்எழுப்பி வந்தவர் இரா.சம்பந்தன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்