[X] Close

தென்சென்னை: மல்லுக்கட்டும் அதிமுக - திமுக; ஜெயிக்கப் போவது யாரு?


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:16 am
  • அ+ அ-

தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது தென்சென்னை மக்களவைத் தொகுதி. முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன் னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை, மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ண மாச்சாரி என பட்டியலிடும் அளவுக்கு அரசியலில் பெரிய தலைவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி இது.

தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளில் தலா 3 தொகுதிகள் திமுக, அதிமுக வசம் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெ.ஜெயவர்தன் 1 லட்சத்து 37,625 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தார். இந்த தொகுதியில் திமுக 7 முறையும் காங்கிரஸ் 5 முறையும் அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது நடக்கும் தேர்தலில் அதிமுக சார்பில் ஜெ.ஜெயவர்தன், திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆர்.ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் அ.ஜெ.ஷெரின் உட்பட 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் 9.79 லட்சம் ஆண்கள், 9.93 லட்சம் பெண்கள் மற்றும் 389 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என எதிர்பார்க்க முடியாது.

தொகுதி பிரச்சினைகள்

அதிகரிக்கும் குடியிருப்புகளுக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்படாதது முக்கிய பிரச்சினையாக உள்ளது. வேளச்சேரி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் அன்றாடம் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். பெருங்குடி குப்பை மேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பை கிடங்கை இடம் மாற்றுவது அல்லது சிறப்பான திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வடசென்னை, மத்திய சென்னையில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ள நிலையில், தென்சென்னையிலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது.

ஜெ.ஜெயவர்தன்

அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் சிட்டிங் எம்பியுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் தொகுதிக்கு அறிமுகமானவராக இருக்கிறார். இவரை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்

திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவரது தந்தை தங்கபாண்டியன் முன்னாள் அமைச்சர், கணவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர், சகோதரர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு என பல்வேறு அறிமுகத்தோடு களம் காண்கிறார். திமுகவினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். தொகுதி பிரச்சினைகளை முன்வைத்தும் கடந்த முறை வெற்றி பெற்றவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்டியும் பிரச்சாரம் செய்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண் டியன், டி.ராஜா உள்ளிட்டோர் ஆதரவு திரட்டியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் பிரச்சாரத்தின்போது, “திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதிக்கு புதியவர். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை” என்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “ஜெயவர்தனுக்குதான் ஒன்றும் தெரியவில்லை. நான் தொகுதியை பற்றி முழுமையாக அறிந்தும், மக்களை சந்தித்தும் பேசி வருகிறேன். 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்து தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை” என்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இசக்கி சுப்பையா

இதற்கிடையில் அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, “அதிமுக, திமுக வேட்பாளர்கள் வாரிசுகளின் அடிப்படையில் போட்டியிடுகின்ற னர்” என கூறி மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரூ.237.56 கோடி சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் இருக்கிறார். இவர், தொகுதிக்கு புதியவர் என்றாலும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பெரும் கூட்டத்தோடு வலம் வந்து பரிசுப் பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

அதிமுகவில் இருந்து ஒரு அணியாக அமமுக உருவாகி இருப்பதால், வாக்குகள் பிரியும் என அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு சிறிய கலக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுபோல், வந்துவிடக்கூடாது என திமுகவும் தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. அதிமுக, திமுக வாக்குகளை பிரித்து இசக்கி சுப்பையா வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக அமமுகவினர் கருதுகின்றனர்.

ஆர்.ரங்கராஜன்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஆர்.ரங்க ராஜன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் மக்கள் மத்தியில் தனி கவனத்தை பெறுகிறார். நடிகர் கமல்ஹாசனை முன்னிலைப்படுத்தி ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். ஐடி ஊழியர்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் வாக்குகளை குறிவைத்து பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளார். அடித்தட்டு மக்களை சந்திக் கும் வகையில், கீழே இறங்கி பிரச்சாரம் செய்யாதது இவரது பலவீனமாக கருதப்படு கிறது.

இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ஜெ.ஷெரின் தினமும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களுக்கான மாற்று அரசியலுக்கு ஆதரவு தாருங்கள் என வாக்கு சேகரித்து வருகிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close