“புதுச்சேரியில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் இல்லை; 1500 பேருக்கு ஒரு மதுக்கடை” - சிபிஎம் குற்றச்சாட்டு


ராஜாங்கம்

புதுச்சேரி: “புதுச்சேரியில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் இல்லை. ஆனால், 1500 பேருக்கு ஒது மதுக்கடை உள்ளது. மது போதையால் 18 சதவீத பெண்கள் கணவரை இழந்துள்ளனர். ரேஷன் கடைகளை திறக்கவும், மது ஒழிப்பை படிப்படியாக அமலாக்கவும் ஜூலை 16-ல் சிறப்பு மாநாட்டை நடத்தவுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் மாநிலச்செயலர் ராஜாங்கம் இன்று வெளியிட்ட அறிக்கை: "ரேஷன் கடைகளை திறக்கவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது. முதல்வரை சந்தித்தபோது அவர் பலமுறை பேசியும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை, என்றாலும் சமையல் எண்ணெய் பருப்பு வகைகள், கோதுமை, ரவை, சர்க்கரை உள்ளிட்ட ஆறு பொருட்களை மானிய விலையில் வழங்கவும் ரேஷன் கடைகளை திறக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் ரேஷன் கடைகளை திறப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

புதுச்சேரியில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் இல்லை ஆனால் 1500 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற தன்மையில் மதுபான கடைகள் அதிகரித்துள்ளன கடந்த 2010-ல் புதிய மதுக்கடைகளை (எஃப்.எல் 2) தனியாருக்கு அனுமதிக்க மாட்டோம் என சிபிஎம் தொடர்ந்த வழக்கில் அரசு உறுதியளித்தது. ஆனால் என்.ஆர் காங்கிரஸ், பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து ரெஸ்ட்ரோபார் களுக் (எஃப்எல் 3) அனுமதி வழங்குகிறோம் என தாராள அனுமதி வழங்கப்பட்டன.

மாநிலத்தில் ஒன்பது தனியார் அந்நிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள போது மேலும் ஆறு புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. மதுபான தொழிற்சாலை மற்றும் ரெஸ்டோ பார் உரிமம் வழங்குவதில் மிகப்பெரிய கொள்ளை நடந்துள்ளது. கஞ்சா, பிரவுன் சுகர், போதை ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை வாய்ப்புகள் அதிகமாக மாநிலத்தில் புழங்குகின்றன. பல இளைஞர்கள் போதைப் பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மதுப்பழக்கம், போதைப் பழக்கத்தால் 18 . 81%ம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர். இதில் இளம் பெண்கள் அதிகம் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

அதனால் அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும், ஊதியம் இன்றி தவிக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடவும், குடியிருப்புகள், பள்ளிகள், ஆன்மீகத் திருத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகள், ரெஸ்டோ
பார்களை அகற்றவும், படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இத்தகைய கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் 16ம் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் போதை எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்தவுள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பங்கேற்க உள்ளார்” என ராஜாங்கம் கூறியுள்ளார்.