[X] Close

திருப்பூர் சாய ஆலையில் பணியின்போது விஷ வாயு தாக்கி அசாம் தொழிலாளர்கள் 4 பேர் மரணம்: காப்பாற்ற முயன்ற 3 பேர் மயக்கம்


4-3

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 07:28 am
  • அ+ அ-

திருப்பூரில் சாய, சலவை ஆலையில் விஷ வாயு தாக்கி சகோதரர்கள் உட்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் 3 பேர் மயக்கமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (45), கருமத்தம்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு, திருப்பூர் வீரபாண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட கருப்பகவுண்டம்பாளையம் புரையார் கவுண்டர்தோட்டம் பகுதியில் சாய சலவை ஆலை உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு சாயமேற்றப்பட்ட துணிகள் சலவை செய்யப்பட்டு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மறுசுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, ஆலையின் பின்புறத்தில் தனி யூனிட் மற்றும் 4 கீழ்மட்டத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட 4 தொட்டிகளும் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால், சுமார் 20 அடி ஆழமுள்ள தொட்டிக்குள் 2 அடி அளவுக்கு கழிவுகள் தேங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அசாம் மாநிலத் தொழிலாளர்கள் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொட்டிகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டிய நிலையில், கயிற்றில் வாளியைக் கட்டி கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தில்வார் உசேன்(23) என்பவர் முதலில் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். இறங்கியவுடன் சத்தத்துடன் மயங்கி விழவே பரூக் அகமது(22) ஏணியைக் கொடுத்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் மயங்கி விழுந்துள்ளார். இவர்களை காப்பாற்ற அடுத்தடுத்து உள்ளே இறங்கிய தில்வார் உசேனின் சகோதரர் அன்வர் உசேன் (24), அபு (21) ஆகியோரும் மயங்கியுள்ளனர்.

தொட்டிக்கு வெளியில் அவர்களுக்கு உதவும் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சத்தம் போடவே, ஆலையில் பணியில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். இருப்பினும், விஷ வாயு தாக்கி 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனாமுல், மஜித், சிராஜுதின் ஆகியோருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வீரபாண்டி போலீஸார் சென்று, சடலங்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கமடைந்தவர்களும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் திருப்பூர் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, மாநகரக் காவல் தெற்கு உதவி ஆணையர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆலை உரிமையாளர்கள் யாரும் இல்லாததால், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரித்தனர்.

கோட்டாட்சியர் செண்பகவள்ளி கூறும்போது, 'ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்று செயல்படுகிறது. உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்ப விவரங்களை சேகரித்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆலைகள் முறையாக செயல்பட, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close