[X] Close

சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரிக்கட்டும்; தைரியம் இருந்தால் செய்யுங்கள்: ஆ.ராசா


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 12:44 pm
  • அ+ அ-

சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரிக்கட்டும் என, ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், செய்தியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

நீலகிரி தொகுதியில் மக்களின் வரவேற்பு உங்களுக்கு எப்படி உள்ளது?

மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மீதான வெறுப்புணர்ச்சி, எதிர்ப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சிகளைத் தூக்கியெறிய வேண்டும் என்ற மக்களின் ஆவேசம் நேராகப் புலப்படுகிறது.

நீலகிரி தொகுதிக்கு என என்னென்ன வாக்குறுதிகளை அளித்துள்ளீர்கள்?

நல்ல மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் ஊட்டிக்குக் கொண்டு வருவது தான் என் முதல் பணியாக இருக்கும். மற்ற வளர்ச்சிப் பணிகள் பிறகு தான்.

நீலகிரி தொகுதி மக்கள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்தத் தொகுதியில் ஜெயித்தாலும், தோற்றாலும் இங்குள்ள மக்களுடன் தான் இருக்கிறேன். அரசு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளைச் செய்துள்ளேன். குடும்பப் பாசத்துடன் மக்கள் என்னை அணுகுகின்றனர்.

மற்றொன்று, தேசத்தைக் காப்பாற்ற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதிலும், அந்த மத்திய அரசை அண்டிப் பிழைக்கும் அதிமுக அரசையும் ஒழிக்க மக்கள் எண்ணுகின்றனர்.

2ஜி வழக்கை  முன்னிறுத்தி முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இது மக்களிடம் எடுபடுமா?

எடுபடாது. வழக்கு இருக்கும்போதே நான் இந்த மக்களைச் சந்தித்துள்ளேன். பாவம், எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும்? ஓ.பி.ஷைனி வழங்கிய தீர்ப்பெல்லாம் படித்திருப்பாரா? ஏதோ எழுதிக் கொடுப்பதைப் படிக்கிறார். அரசியலில் அவர் ஒரு கைநாட்டு என்று தான் சொல்வேன். அவருக்கு 2ஜி பற்றி பேசவெல்லாம் தகுதி இருக்கிறதா?

பழங்குடியினர் அவர்களின் இடத்தை விட்டு விரட்டப்படுவோம் என, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அஞ்சுகிறார்கள். நீலகிரியில் உள்ள பழங்குடியினரும் பயப்படுகின்றனரே?

அவர்ள் வாழும் இடத்தில் பட்டா வேண்டும் என, பழங்குடியினர் நினைக்கின்றனர். நாங்கள் வந்து அவர்களுக்கு அந்நிலத்தைக் கொடுப்போம்.

சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக மறு விசாரணை செய்ய வேண்டும் என அவர் மனைவி கூறியுள்ளாரே?

அதில் வேண்டும் என்றே ஸ்டாலின் பெயரையும் சேர்க்கின்றனர். கோடநாடு விவகாரம் குறித்துப் பேசுவதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைத்தார்கள். அவர்களால் தடை போட முடியவில்லை. கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது கொலைப்பழி இருக்கிறது. அந்த கொலைப்பழியைத் துடைப்பதற்கு அவரால் இயலவில்லை. அதனால், அதே மாதிரியான புகாரை மற்றவர்கள் மீது சுமத்த வேண்டும்.

சாதிக் பாட்சா மரணம் நிகழும்போது நான் சிறையில் இருக்கிறேன். என்னுடைய உறவினர்கள் பல பேர் டெல்லியில் இருக்கின்றனர். அவர் மரணத்தை விசாரித்தது பாஜக அரசின் கீழ் உள்ள சிபிஐ. முடிவு அறிக்கை கொடுத்ததும் அதே சிபிஐ. திரும்பவும் விசாரிக்கட்டும். சிபிஐ, சிபிசிஐடி விசாரிக்கட்டும். தைரியம் இருந்தால் செய்யுங்கள். திகார் சிறைக் கதவுகளைத் திறந்து வெளியே வந்து, கொலை செய்து விட்டு மீண்டும் சிறைக்கே வந்துவிட்டதாகக் கூட  சொல்லட்டும்.

இலங்கை விவகாரத்தை மீண்டும் கிளப்புகிறார்களே?

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், சில்லறைத்தனமாகப் பேசுகிறார்கள்.

நீங்கள் வெற்றி பெற்றால் அமைச்சராவீர்களா?

அதை தலைமைதான் முடிவு செய்யும்.

இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close