[X] Close

அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக - பாமக இடையே கடும் போட்டி: இருவருக்கும் சவால் விடுக்கும் அமமுக வேட்பாளர்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 10:39 am
  • அ+ அ-

முக்கிய வேட்பாளர்கள் போட்டி யிடும் தொகுதியாக மாறியுள்ள அரக்கோணத்தை தனது கோட்டையாக மாற்ற பாமகவும், பாமகவை வீழ்த்தி அரக்கோணம் தொகுதியை திமுக வசமாக்கவும் கடுமையான போட்டி நடந்துவருகிறது. இவர்கள் இருவருக்கும் சவால் விடுக்கும் வகையில் அமமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் மக்களவைத் தொகுதி ‘விவிஐபி’ வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்துடன் தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றபோதே அரக்கோணத்தில் பாமக போட்டியிடுவது உறுதியாகி விட்டது. வட தமிழகத்தில் பாமவுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கும் தொகுதிகளில் அரக்கோணமும் ஒன்று. பாமக போட்டியிடும் தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த முடிவுசெய்த திமுக, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனை களத்தில் இறக்கியது.

அரக்கோணம் மக்களவை தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டார். திமுகவில் ஜெகத்ரட்சகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் ஸ்டார் அந்தஸ்துடன் தேர்தல் களம் சூடுபிடித்தது.

என்.ஜி.பார்த்திபன் (அமமுக), பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி), ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 14,79,961 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் திருத்தணியில் இருந்தே வாக்கு சேகரிப்பை தொடங்கினர்.

கடந்த 2014-ம் ஆண்டு அரக் கோணம் மக்களவை தேர்தலில்10,89,052 வாக்குகள் பதிவாகியுள் ளன. இதில், அதிமுக வேட்பாளர் கோ.ஹரி 4,93,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ 2,52,768 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, அரக்கோணம் தொகுதியில் முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு போட்டியிட்டு 2,33,762 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். அதிமுகவின் வாக்குகள் நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஏ.கே.மூர்த்தி வாக்குகளை சேகரித்து வருகிறார். பட்டியலின மக்கள், சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற சளைக்காமல் மற்ற பகுதிகளில் வாக்குகளை சேகரித்து வருகிறார். ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது எடுத்த நற்பெயர் தன்னை கரைசேர்க்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். மூன்றாவது முறையாக போட்டியிடும் அவர், பாமகவின் வாக்கு வங்கியை குறிவைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறார். வன்னியர்களின் வாக்குகள் ஏ.கே.மூர்த்தி, ஜெகத்ரட்சகன் என இருவரில் யாருக்கு விழும் என்ற கணக்கில் களப்பணி நடந்து வருகிறது. கணிசமான வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்களின் வாக்குகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளும் திமுக வேட்பாளருக்கு கிடைக்கும் என்பது கூடுதல் பலம்.

வேலை வாய்ப்புகள் இல்லாதது, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட காரணங்களுடன் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன் ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற திமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக அவரது மகன், மகள் ஆகியோர் தனித்தனியாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்திபன் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது தந்தை முன்னாள் எம்பியும் முன்னாள் எம்எல்ஏவுமான சி.கோபால், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பார்த்திபன், அதிமுகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த அனுபவம் போன்றவற்றால் அரக்கோணம் மக்களவை தொகுதியில் பரிசுப் பெட்டி சின்னத்துக்காக தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார். எனினும் அரக்கோணம் எங்களின் கோட்டை என்பதை நிரூபிக்க பாமக, திமுக இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close