[X] Close

திரை நட்சத்திரங்களால் ஜொலிக்கும் மதுரை தேர்தல் களம்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 10:09 am
  • அ+ அ-

மதுரையில் அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து திரை நட்சத்திரங்கள் குவியத்தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.

காமராசர், அண்ணா காலத்தில் இருந்தே தமிழக அரசியலில் திரைப்படத்துறையினரின் பங்களிப்புத் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதுபோல மதுரையையும், சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். இந்தத் தேர்தலில் ஆரம்பக்கட்டப் பிரச்சாரத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் தலைகாட்டவில்லை. இருப்பினும் நடிகர், நடிகைகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு திரை நட்சத்திரங்கள் அதிகளவில் களமிறக்கப்பட்டனர்.

அவரது மறைவுக்குப் பின் திரைப்படத்துறையைச் சேர்ந்த பல நட்சத்திரப் பேச்சாளர்கள் தலைகாட்டாமல் ஒதுங்கிக்கொண்டனர். அதிமுக தேர்தல் பிரச்சா ரத்துக்கு நடிகர்கள் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதிமுக கூட்டணியை ஆதரித்து நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில் சு.வெங்கடேசனை ஆதரித்து நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர ஆரம்பித்தனர். நடிகை ரோகினி, இயக்குநர்கள் கரு.பழனியப்பன், லெனின் பாரதி, ராசு, பாடலாசிரியர் யுகபாரதி, நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள் சு.வெங்கடேசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்துக்கு திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப் பெரியளவில் பயன்படுத்த மாட்டார்கள். கொள்கைகளையும், நோக்கங்களையும் முன்னிலைப்படுத்தியே இதுவரை தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். ஆனால், இந்த தேர்தலிலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், தனக்கு ஆதரவாக திரை நட்சத்திரங்களை தேர்தல் களத்தில் இறக்கியதால் தற்போது அதிமுக தரப்பும் நடிகர், நடிகைகளை களம் இறக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து நடிகர் வையாபுரி, நடிகை பவிதா, நடிகர் சரத்குமார், நடிகர் கார்த்திக் பிரச்சாரம் செய்தனர்.

நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுப்டட நடிகர் கார்த்திக், "ராஜ்சத்யன் என் தம்பி, அவர் மதுரைக்கு நல்லது செய்வார், அதற்கு நான் சத்தியம் செய்கிறேன்" என்று சொல்லி வாக்குச் சேகரித்தார்.

திரையில் பார்த்த நட்சத்திரங்களை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தால் அதிகளவு மக்கள் திரள ஆரம்பித்துள்ளதால் மதுரை தேர்தல் களம் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. அமமுகவுக்கு ஆதரவாக நடிகர் செந்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் கமல் கட்சிக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடிகர் கமலை தவிர நட்சத்திரங்கள் யாரும் வரவில்லை. அதுபோல், நாம் தமிழர் கட்சிக்கு சீமானை தவிர திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் யாரும் வரவில்லை.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close