[X] Close

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறார்களா?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறார்களா என்பதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு திண்டிவனத்தைச் சேர்ந்த அஞ்சலிதேவி என்பவரின் மகள் யுவஸ்ரீ, அங்குள்ள பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்தார். பள்ளி வேனில்இருந்து இறங்கிய யுவஸ்ரீ, வேனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். அதைக் கவனிக்காத வேன் ஓட்டுநர், வேனை பின்னோக்கி இயக்கியதால் யுவஸ்ரீ சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் அஞ்சலிதேவி புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தனது மகளின் இழப்புக்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அஞ்சலிதேவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘பள்ளி வேனில் உதவியாளர் இருந்து இருந்தால் ஓட்டுநர் கவனக்குறைவாக வேனை பின்னோக்கி இயக்கி இருக்கமாட்டார். எனது மகளும் பலியாகி இருக்க மாட்டார். இதற்குபள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி வாகனங்களி்ல் மாணவர்கள் பத்திரமாகப் பயணிக்க தனியாக உதவியாளர்களை நியமிக்க வேண்டும். அதுபோல், பள்ளி வாகனங்கள்முறையாக இயக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்படவில்லை’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தொடக்க கல்வித் துறை இணை இயக்குநரை எதிர்மனுதாரராகச் சேர்த்து, ‘பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனரா என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு இம்மாதம் 29-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளி வைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close